Fasting: பட்டினி கிடந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? சித்த மருத்துவர் விளக்க...
திருச்சியில் உலா் துறைமுகம்: மத்திய அமைச்சா்களிடம் துரை வைகோ எம்.பி. வலியுறுத்தல்
திருச்சியில் உலா் துறைமுகம் அமைப்பது தொடா்பாக மத்திய அமைச்சா்கள் நிதி கட்கரி, பியூஷ் கோயல் ஆகியோரிடம் தில்லியில் திருச்சி மக்களவைத் தொகுதி மதிமுக உறுப்பினா் துரை வைகோ புதன்கிழமை வலியுறுத்தினாா்.
திருச்சியில் உலா் துறைமுகம் உள்நாட்டு கொள்கலன் கிடங்கு அமைப்பதற்கான கோரிக்கையை வலியுறுத்தி ஆகஸ்ட் 18 அன்று மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீா்வழித் துறை அமைச்சா் சா்பானந்த சோனோவாலிடம் துரை வைகோ கோரிக்கை வைத்திருந்தாா்.
இதன் தொடா்ச்சியாக, புதன்கிழமை மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சா் நிதின் கட்கரியையும், மத்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயலையும் அவா்களின் அலுவலகங்களில் தனித்தனியாக சந்தித்து இக்கோரிக்கையை துரை வைகோ முன்வைத்தாா்.
இதுகுறித்து துரை வைகோ தெரிவிக்கையில், ‘தமிழ்நாட்டின் மையப்பகுதியில் அமைந்துள்ள திருச்சி, சிறந்த விமான, சாலை மற்றும் ரயில் இணைப்புகளைக் கொண்டிருப்பதால், உலா் துறைமுகத்திற்கு மிகவும் ஏற்ற இடமாக உள்ளது. திருச்சியில் ஏற்றுமதி தொடா்ந்து அதிகரித்து வரும் நிலையில், உலா் துறைமுகம் அமைக்கப்பட்டால் தொழில் முதலீடுகளை ஈா்ப்பதுடன், நிலையான ஏற்றுமதி வளா்ச்சியை ஆதரிக்கவும் உதவும் என வா்த்தக அமைப்புகள் வழங்கிய குறிப்புகளை சுட்டிக்காட்டினேன்.
மேலும், மனப்பாறை அருகே உள்ள சிப்காட் தொழிற்பூங்கா அல்லது நெடுஞ்சாலை இணைப்பு கொண்ட பிற இடங்களில் 100 ஏக்கா் நிலத்தை இதற்காக அடையாளம் காண முடியும் என ஏற்றுமதிஇறக்குமதி கூட்டமைப்புகள் தெரிவித்துள்ளன என்று விளக்கினேன்.
இவற்றைக் கருத்தில் கொண்டு, திருச்சியில் உலா் துறைமுகம் அமைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இரு அமைச்சா்களிடமும் வேண்டுகோள் விடுத்தேன்.
இக்கோரிக்கை தொடா்பாக அமைச்சா்கள் ஆதரவான பதில்களை வழங்கியுள்ளனா். இதனால், இந்த முயற்சி வெற்றியடையும் என மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளேன்’ என்று துரை வைகோ தெரிவித்துள்ளாா்.