திருச்சியில் ஜல்லிக்கட்டு அரங்கம்: அடிக்கல் நாட்டினார் உதயநிதி!
திருச்சி: திருச்சியில் ரூ.3 கோடி மதிப்பில் ஐந்து ஏக்கர் பரப்பளவில் ஜல்லிக்கட்டு அரங்கத்துக்கு துணை முதல்வர் உதயநிதி அடிக்கல் நாட்டினார்.
விழாவில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மத்திய அரசு தமிழகத்துக்கு எந்த நிதியும் ஒதுக்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் பொங்கல் விழாவை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களிலும் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.
திருச்சியில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விளையாட்டில் திருச்சி, திருவாரூர், பெரம்பலூர் அருகில் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் 700க்கு மேற்பட்ட காளைகளும் கலந்து கொள்ளும்.
ஜல்லிக்கட்டை காண்பதற்கு லட்சக்கணக்கில் மக்கள் கூடுவார்கள். இந்த வகையில் பெருமைப்பெற்ற இந்த ஜல்லிக்கட்டுக்காக திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட சூரியூர் பகுதியில் 5ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 3 கோடி மதிப்பீட்டில் ஜல்லிக்கட்டு மைதானம் கட்ட அரசு திட்டமிட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதற்கான அரசாணையை இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுதுறை சார்பில் கடந்த ஜனவரி மாதம் 11-ம் தேதி வெளியிடப்பட்டது.
அதன்படி இன்று தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.
இந்த அரங்கத்தில் அலுவலகம், முக்கிய விருந்தினர் தங்குவதற்கான அறைகள், ஜல்லிக்கட்டு வீரர்கள் மாற்றுவதற்கான அறைகள், ஜல்லிக்கட்டு மைதானத்தில் இரண்டு பகுதிகளிலும் பார்வையாளர் பார்ப்பதற்கான பிரம்மாண்ட பார்வையாளர் மாடம் அமைய உள்ளது. இதில் சுமார் 810 பேர் அமரும் வகையில் அமைக்கப்படவிருக்கிறது.
மற்றும் உடற்பயிற்சி அரங்கம், உள் விளையாட்டு அரங்கம் ஆகியவையும் அமைய உள்ளது. இப்பணிகள் அனைத்தும் வரும் 9 மாதங்களில் முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மத்திய அரசிடம் இருந்து நிதி பெறுவது குறித்து முதலமைச்சரிடம் கலந்து பேசி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். நாளை இளைஞரணி அமைப்பாளர், துணை அமைப்பாளர் கூட்டம் நடத்தப்பட உள்ளது அதிலும் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க உள்ளோம்.
மத்திய அரசிடம் இருந்து எந்த நிதியும் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்படுவதில்லை. தமிழ்நாட்டை மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறார்கள் என தெரிவித்தார்.