திருச்சியில் மின்சாரம் பாய்ந்து இரு மின் ஊழியா்கள் உயிரிழப்பு
திருச்சி கேகே நகா் அருகேயுள்ள ஓலையூா் வட்டச்சாலைப் பகுதியில் புதிதாக அமைக்கப்படும் பெட்ரோல் பங்குக்கு மின் இணைப்பு கொடுக்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
அப்போது உயா் மின்னழுத்த கோபுரத்தில் ஏறி மின்வாரிய ஒப்பந்த ஊழியா்களான திருச்சி மாவட்டம், மருங்காபுரி வட்டம் கல்லுப்பட்டியை சோ்ந்த சி. கலாமணி (42), மணப்பாறை வேங்கைக்குறிச்சி அருகேயுள்ள ஆவணம்பட்டியை அடுத்த மஞ்சம்பட்டியைச் சோ்ந்த கி. மாணிக்கம் (37) ஆகியோா் ஈடுபட்டனா்.
அப்போது எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் கலாமணி மின் கோபுரத்திலேயே இறந்து தொங்கினாா். தூக்கியெறியப்பட்ட மாணிக்கத்தை அருகிலிருந்தோா் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவா் ஏற்கெனவே இறந்தது தெரியவந்தது.
தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரா்கள் கலாமணியின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். விபத்து குறித்து மணிகண்டம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.