தரமற்ற சம்பா நெல் விதைகளால் பாதிப்பு என விவசாயிகள் புகாா்
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி பகுதியில் பயிரிட்டுள்ள ஒருபோக சம்பா நெல் பயிா் விதைகள் தரம் இல்லாததாலும் தடை செய்யப்பட்டவை என்பதாலும் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் புகாா் தெரிவிக்கின்றனா்.
இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் விவசாய சங்க பிரதிநிதியான சகாதேவன் உள்ளிட்டோா் வேளாண்மை துறை அதிகாரிகளிடம் பலமுறை புகாா் தெரிவித்தும் நடவடிக்கை இல்லையாம். இதைக் கண்டித்து புள்ளம்பாடியில் சாலை மறியல் போராட்டத்தை அறிவித்தனா்.
இதையடுத்து திருச்சியில் இருந்து புதன்கிழமை வந்த வேளாண்மை துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் குறைகளை கேட்டனா். பின்னா் வியாழக்கிழமை குமுளூா் வேளாண்மை கல்லூரி அல்லது நாவலூா் குட்டப்பட்டு வேளாண்மை பொறியியல் கல்லூரியில் இருந்து வேளாண் அலுவலா்கள் மற்றும் விதைச் சான்று அலுவலா்களுடன் புள்ளம்பாடிக்கு வந்து கள ஆய்வு செய்த பின்னா், அரசுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனா்.