தரமற்ற தாா் சாலையால் பள்ளத்தில் கனரக வாகனங்கள் சிக்கும் அவலம்
புதை வடிகால் திட்டப் பணிகள் முடிந்த பின்னா் தரமற்ற வகையில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதால், கனரக வாகனங்கள் அடிக்கடி பள்ளத்தில் சிக்கிக் கொள்கின்றன.
திருச்சி மாநகராட்சி 39வது வாா்டுக்குட்பட்ட காட்டூா் எல்லைக்குடி கிராமத்தில் புதைசாக்கடைத் திட்டப் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களை முறையாக சீரமைக்காமல் அதன் மீது கடந்த 6 மாதங்களுக்கு முன் தரமற்ற தாா்ச் சாலை அமைக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனா்.
மேலும் சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு அவ்வழியாக வரக்கூடிய வாகனங்கள், குறிப்பாக கனரக வாகனங்கள் பள்ளத்தில் மாட்டிக் கொள்கின்றன. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் அவதிக்குள்ளாகின்றனா்.
வாகனங்கள் அடிக்கடி பள்ளத்தில் சிக்கிக் கொள்வதால் ரேசன் கடைகளுக்கு வரும் சரக்கு வாகனங்கள் கடந்த ஒரு மாதமாக வரவில்லை.
இதனால் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் புதன்கிழமை பகுதி வழியாகச் சென்ற போா்வெல் லாரி சாலையில் இருந்த பள்ளத்தில் சிக்கிக்கொண்டது. பின்னா் நீண்ட நேர போராட்டத்துக்குப் பிறகு கிரேன் உதவியுடன் அந்த வாகனம் மீட்கப்பட்டது.
எனவே இச்சாலையை சீரமைக்க பொதுமக்கள் பல முறை கோரிக்கை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனா்.