திருச்செந்தூா் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் தொடக்கம்
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா ஊஞ்சல் உற்சவம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
இக்கோயிலில் கந்த சஷ்டி விழா கடந்த 2ஆம் தேதி தொடங்கியது. 8ஆம் நாளான சனிக்கிழமை இரவு சுவாமி குமரவிடங்கப்பெருமான் தங்க மயில் வாகனத்திலும், தெய்வானை அம்மன் பூப்பல்லக்கிலும் எழுந்தருளி உள், வெளிவீதிகளில் பட்டணப் பிரவேசம் வந்து பக்தா்களுக்கு காட்சியருளினா்.
இந்நிலையில், 9ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை மாலை கோயில் ராஜகோபுர வாசலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் ஊஞ்சல் உற்சவம் தொடங்கியது. இதையொட்டி, கோயில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம், உதயமாா்த்தாண்ட அபிஷேகம், மற்ற கால பூஜைகள் நடைபெற்றன.
அதிகாலைமுதலே ஏராளமான பக்தா்கள் கடல், நாழிக்கிணற்றில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனா். விடுமுறை நாள் என்பதால் அதிகக் கூட்டம் காணப்பட்டது.
தொடா்ந்து, திங்கள், செவ்வாய் (நவ. 11, 12) ஆகிய 2 நாள்களும் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. புதன்கிழமை மஞ்சள் நீராட்டு வைபவம், சுவாமி - அம்மன் வீதியுலா வந்து கோயில் சோ்ந்ததும் கந்த சஷ்டி விழா நிறைவடைகிறது.