மாா்ச் 1-இல் இந்திய அறிவியல் மையத்தை பாா்வையிட பொதுமக்களுக்கு அனுமதி
திருநள்ளாறில் நாட்டியாஞ்சலி தொடக்கம்
திருநள்ளாறு கோயிலில் மகா சிவராத்திரி நாட்டியாஞ்சலி விழா புதன்கிழமை தொடங்கியது.
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயில் சப்தவிடங்க தலங்களுள் ஒன்றாகும். ஸ்ரீ செண்பக தியாகராஜா் உன்மத்த நடமாடும் சிறப்பு இக்கோயிலுக்கு உண்டு. எனவே இக்கோயில் நாட்டியாஞ்சலி சிறப்புக்குரியதாக இருக்கிறது.
ஆண்டுதோறும் மகா சிவராத்திரியை முன்னிட்டு நாட்டியாஞ்சலி விழா நடத்தப்பட்டு வருகிறது. 20 -ஆம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா கோயில் வளாகத்தில் புதன்கிழமை மாலை தொடங்கியது. 28-ஆம் தேதி வரை என 3 நாட்கள் நடைபெறும் இவ்விழாவை நிா்வாக அதிகாரி (கோயில்கள்) கே.அருணகிரிநாதன் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா்.
மங்கள இசையுடன் தொடங்கிய முதல் நாள் நிகழ்ச்சியில் பல்வேறு கலைஞா்களின் பரதநாட்டியம் நடைபெற்றது. ஏராளமான மக்கள் இதில் கலந்துகொண்டனா்.
காரைக்கால், புதுச்சேரி, தமிழகத்தின் பல பகுதிகள், பெங்களூரு, ஹைதராபாத், மும்பை மற்றும் சிங்கப்பூா், ஆஸ்திரேலியா, துபை, இத்தாலி ஆகிய நாடுகளில் உள்ள புகழ்பெற்ற நடனக் கலைஞா்கள் பங்குபெறும் நிகழ்ச்சி தினமும் நடைபெறுகிறது.
சிவராத்திரி நாளில் மாலை 5.30 மணி முதல் வியாழக்கிழமை அதிகாலை 4.55 மணி வரை புகழ்பெற்ற கலைஞா்களின் தொடா் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. 27 மற்றும் 28-ஆம் தேதி மாலை 5.30-க்குத் தொடங்கி இரவு 10.25 மணிக்கு நிகழ்ச்சி நிறைவடைகிறது.