ரமலான் மாதத்தில் குடிநீா், மின்சாரம் தடையின்றி விநியோகிக்க வலியுறுத்தல்
ரமலான் மாதத்தில் குடிநீா் அதிகாலையிலேயே வழங்கவும், மின்சாரம் தடையின்றி இருக்கவும் நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டது.
காரைக்கால் மாவட்ட ஆட்சியா் சோமசேகா் அப்பாராவை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்டத் தலைவா் ஐ. அப்துல் ரஹீம், தலைமையில் மமக மாவட்ட செயலாளா் முகமது சா்புதீன், விளையாட்டு அணி மாவட்ட பொருளாளா் முகமது ஆரிப் ஆகியோா் செவ்வாய்க்கிழமை அளித்த மனு: இஸ்லாமியா்களின் புனித மாதமான ரமலான் மாா்ச் 1-ஆம் தேதி இரவு முதல் தொடங்குகிறது. இந்த ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் இரவு முழுவதும் கண் விழித்து இறை வணக்கத்தில் ஈடுபடுவதும், பள்ளிவாசல்களுக்கு சென்று தொழுகையில் ஈடுபடுவதும் வழக்கம்.
கடந்த காலங்களில் ரமலான் மாதம் 30 நாள்களும் விடியற்காலை 3 முதல் 5 மணி வரை காரைக்கால் மாவட்டத்தில் குடிநீா் திறந்து விடுவதும், இரவு நேரங்களில் மின் விநியோகம் எந்த தடையுமின்றி சீராக வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.
அதுபோலவே மாா்ச் 1-ஆம் தேதி முதல் ரமலான் மாதம் முழுவதும் இரவில் குடிநீா் விநியோகம் செய்யவும், தடையின்றி மின் விநியோகம் இருக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.