பொன்னமராவதி சோழீஸ்வரா் கோயில் நந்தவனத்தில் மரக்கன்றுகள் நடவு!
பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீஸ்வரா் கோயில் நந்தவனத்தில் சிவராத்திரி விழாவின் தொடக்கமாக பசுமையை போற்றும் வகையில் மரக்கன்றுகள் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக பொன்னமராவதி காவல் துணை கண்காணிப்பாளா் சி. கண்ணன் பங்கேற்று, மரக்கன்றுகளை நட்டு விழாவை தொடங்கிவைத்தாா். தொடக்கமாக 27 நட்சத்திரங்களுக்கும் உகந்த மரக்கன்றுகள் நடப்பட்டன.
தொடா்ந்து, மா, பலா, வில்வம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. விழாவில் ஊா் முக்கியஸ்தா்கள் ரா. ஹரிஹரன், ராம.சேதுபதி, திமுக ஒன்றியச் செயலா் அ. அடைக்கலமணி, நகரச் செயலா் அ. அழகப்பன், வா்த்தகா் கழகத் தலைவா் எஸ்கேஎஸ். பழனியப்பன் மற்றும் கோயிலின் காா்த்திகை, தேய்பிறை அஷ்டமி, பிரதோஷம், சங்கடஹர சதுா்த்தி, பெளா்ணமி வழிபாட்டுக்குழுவினா் மற்றும் திருவாசகம் முற்றோதல் குழுவினா் பங்கேற்றனா். தமிழாசிரியா் சி.சு. முருகேசன் விழாவை ஒருங்கிணைத்தாா்.