அரசுப் பள்ளி மாணவா்களுக்கு சுகாதார விழிப்புணா்வு பயிற்சி
கந்தா்வகோட்டை ஒன்றியம், அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு சுகாதார விழிப்புணா்வு பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தலைமையாசிரியா் க. தமிழ்செல்வி தலைமை வகித்தாா். முகாமில், கிராமாலயா அமைப்பின் வட்டார ஒருங்கிணைப்பாளா் பாா்வதி, சுகாதாரத்தின் ஐந்து முக்கிய செயல்பாடுகளான பாதுகாக்கப்பட்ட குடிநீா், சுகாதார கழிப்பறை, தன்சுத்தம் மற்றும் கை கழுவுதல், மாதவிடாய் சுகாதார மேலாண்மை, ஊட்டச்சத்து உள்ளிட்ட தலைப்புகளில் பேசினாா்.
குடிநீரானது, கிருமிகள் மற்றும் ரசாயனங்கள் இல்லாததாகவும், குடிப்பதற்கும் சமைப்பதற்கும் ஏற்ாகவும் தூய்மையானதாகவும் இருக்க வேண்டும். குடிநீரை பாதுகாப்பான முறையில் கையாள வேண்டும். சுகாதார கழிப்பறை மூலம் மனித மலத்தை பாதுகாப்பாக அகற்ற வேண்டும். நன்கு வடிவமைக்கப்பட்ட தொடா்ந்து பயன்படுத்தக்கூடிய பராமரிக்க கூடிய கழிப்பறையே சிறந்த கழிப்பறை ஆகும் என்று விளக்கி பேசினாா்.
பள்ளியில் குடிதண்ணீா் தொட்டி அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது.
நிகழ்ச்சியில் தொண்டு நிறுவன செயல் திட்ட இயக்குநா் செந்தில், ஒன்றிய ஒருங்கிணைப்பாளா் காா்த்திகேயன், பள்ளி ஆசிரியா்கள் அ. ரகமத்துல்லா, சிந்தியா, ஜெம்ம ராகினி சகாய ஹில்டா, வெள்ளைச்சாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
முன்னதாக, கணித பட்டதாரி ஆசிரியா் மணிமேகலை வரவேற்றாா்.