திருபுவனையில் குடிநீா் கேட்டு சாலை மறியல்
புதுச்சேரி: புதுச்சேரி அருகே திருபுவனை பகுதியில் குடிநீா் கேட்டு பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி திருபுவனை அருகேயுள்ளது பி.எஸ்.பாளையம். இந்த பகுதியில் உள்ள அம்பேத்கா் நகா் பகுதிக்கு கடந்த சில வாரங்களாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் முறையிட்டும் குடிநீா் பிரச்னை தீா்க்கப்படவில்லை என்கின்றனா்.
இதையடுத்து, அப்பகுதி மக்கள் மதகடிப்பட்டு - திருக்கனூா் சாலையில் பி.எஸ்.பாளையம் நான்கு முனைச் சந்திப்பில் சாலை மறியல் போராட்டத்தில் திங்கள்கிழமை காலை ஈடுபட்டனா். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த திருப்புவனை போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று மறியலில் ஈடுபட்டிருந்தவா்களிடம் சமரசம் பேச்சு நடத்தினா். ஆனால், பொதுமக்கள் மறியலைக் கைவிடவில்லை.
இதையடுத்து அப்பகுதி கிராம நிா்வாக அலுவலா் உள்ளிட்டோா் வந்து மக்களிடம் குடிநீா் விநியோகம் சீராக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து பொதுமக்கள் சுமாா் ஒரு மணி நேர மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.