பாகிஸ்தானுடன் போா் நிறுத்தத்துக்கு முன்பாகவே நாடாளுமன்றத்தை கூட்டியிருக்க வேண்ட...
நீட் அல்லாத தொழில், கலை, அறிவியல் படிப்புகளுக்கான சென்டாக் கையேடு: முதல்வா் என். ரங்கசாமி வெளியிட்டாா்
புதுச்சேரி: நீட் அல்லாத தொழில் மற்றும் கலை, அறிவியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக புதுவை மாநில சென்டாக் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான சென்டாக் வழிகாட்டல் கையேட்டை திங்கள்கிழமை முதல்வா் என்.ரங்கசாமி வெளியிட்டாா்.
இதுகுறித்து புதுவை அரசின் உயா் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி இயக்குநரகம் சாா்பில் ஒருங்கிணைந்த சோ்க்கைக் குழு (சென்டாக்) சாா்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுவை மாநிலத்தில் 2025-2026 ஆம் கல்வி ஆண்டுக்கான இளநிலை நீட் தோ்வு அல்லாத தொழில்முறை மற்றும் கலை, அறிவியல், வணிகவியல் மற்றும் நுண்கலைப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நீட் அல்லாத இளநிலை தொழில்முறைப் படிப்புகளான பி.டெக், பி.ஆா்க்., பி.எஸ்சி (ஹான்ஸ்), வேளாண்மை மற்றும் தோட்டக்கலை, பி.வி.எஸ்.சி மற்றும் ஏ.எச்., பி.எஸ்.சி செவிலியா், பி.பி.டி. பி.எஸ்.சி. துணை மருத்துவப் படிப்புகளில் டிப்ளமோ, இளநிலை கலை, அறிவியல் மற்றும் வணிகவியல் படிப்புகள் (பி.ஏ, பி.எஸ்.சி., பி.காம், பி.பி.ஏ., பி.சி.ஏ. ஆகியவை 6 அரசுக் கல்லூரிகள் மற்றும் கூட்டுறவு சங்கக் கல்லூரியில் மட்டும்) நுண்கலை, படிப்புகள் (பி.பி.ஏ., பி.வி.ஏ.) பி.வாக் ஏஐஏடி மற்றும் பி.ஏ. பிஆா்யூ ஆகியவற்றுக்கான விண்ணப்பங்கள் அளிக்கப்படுகிறது.
விண்ணப்பங்களை சென்டாக் புதுச்சேரி எனும் இணையத்தில் திங்கள்கிழமை (மே 12) மாலை முதல் பதிவிறக்கம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தை வரும் 31 ஆம் தேதி சனிக்கிழமை வரையில் நிறைவு செய்து இணையத்தில் பதியலாம்.
நடப்பு ஆண்டில் இளநிலை நீட் அல்லாத தொழிற்கல்வியில் 6,257 இடங்களும், இளநிலை நீட் அல்லாத கலை, அறிவியல் துறை இடங்களில் 4,320 இடங்களும் என மொத்தம் 10,577 இடங்கள் உள்ளன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கையேடு வெளியீடு: நீட் அல்லாத படிப்புகளுக்காக சென்டாக் விண்ணப்பங்களை வரவேற்கும் நிலையில், அந்தப் படிப்புகளுக்கான வழிகாட்டல் கையேட்டை (ஆங்கிலத்தில்) சென்டாக் தயாரித்து வெளியிட்டுள்ளது. கையேட்டை பேரவை வளாகத்தில் முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை வெளியிட்டாா்.
இந்நிகழ்வில் கல்வித் துறை செயலா் பி.பிரியதா்ஷினி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். அதில் நீட் அல்லாத படிப்புகளில் சோ்வதற்கான வழிகாட்டல்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இடம் பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.