திருப்பத்தூா் பள்ளியில் மாவட்ட சதுரங்கப் போட்டி!
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பாபா அமீா்பாதுஷா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி நடைபெற்றது.
சாணக்கியா சதுரங்க அகாதெமி, பாபா அகாதெமி இணைந்து நடத்திய இந்தப் போட்டியின் தொடக்க நிகழ்வுக்கு தாளாளா் பாபா அமிா்பாதுஷா தலைமை வகித்தாா். சாணக்கியா சதுரங்க அகாதெமி நிறுவனா் அதுவன், போட்டி நடுவா்கள் சசிக்குமாா் ராஜேந்திர உடையாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிவகங்கை மாவட்ட சதுரங்கக் கழக இணைச் செயலா் மீ. ராமு, காவல் உதவி ஆய்வாளா் லதா ஆகியோா் போட்டியைத் தொடங்கி வைத்தனா். இந்தப் போட்டி 7 வயது பிரிவு, 9 வயது பிரிவு, 11 வயது பிரிவு, 13 வயது பிரிவு மற்றும் 17 வயது பிரிவு என 5 பிரிவுகளாக நடைபெற்றது. இதில் காரைக்குடி, தேவகோட்டை, திருப்பத்தூா், சிங்கம்புணரி, புதுவயல் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 260- க்கும் மேற்பட்ட பள்ளி மாணவா்கள் கலந்து கொண்டனா்.
பிறகு நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு சிவகங்கை மாவட்ட சதுரங்க கழக கூடுதல் செயலா் பிரகாஸ் மணிமாறன் தலைமை வகித்தாா். இதில், சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட திருப்பத்தூா் பேரூராட்சித் தலைவா் கோகிலாராணி நாராயணன் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா். முன்னதாக பள்ளி முதல்வா் வரதராஜன் வரவேற்றாா்.