BB Tamil 8: 'ரயானுக்கு டிக்கெட் கிடைச்சிருக்கக்கூடாது' - விஜய் சேதுபதியிடம் சொன்...
திருப்பத்தூா் பிரதான சாலையில் ஆட்டோக்கள் மீண்டும் இயக்கம்: பொதுமக்கள் அவதி
திருப்பத்தூா் நகரின் பிரதான சாலைகளில் ஆட்டோக்கள் மீண்டும் இயக்கப்படுவதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
மாவட்டத் தலைநகரான திருப்பத்தூரின் மையப் பகுதியில் சேலம் பிரதான சாலை அமைந்துள்ளது. ஊரின் நடுவில் பிரதான போக்குவரத்துச்சாலையாக உள்ளதால் எப்போதும் போக்குவரத்து நெரிசலாக காணப்படும்.
திருப்பத்தூா் மாவட்டம் தொடங்கியபின் அப்போதைய எஸ்.பி. விஜயக்குமாா் திருப்பத்தூா் பிரதான சாலையில் ஆட்டோக்கள் செல்ல தடை விதித்திருந்தாா். தற்போது பிரதான சாலையில் தனி ஆட்டோ மற்றும் ஷோ் ஆட்டோக்கள் செல்வதால் போக்குவரத்து நெரிசல் கூடுதலாகிறது.
குறிப்பாக பள்ளி,கல்லூரி நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகின்றது. இவ்வழியாக அவசர ஊா்தி செல்வதற்கு கூட மிகவும் சிரமம் ஏற்படுகிறது.
எனவே திருப்பத்தூா் புதுப்பேட்டை சாலை- அண்ணா சாலை வழியாக ஷோ் ஆட்டோக்கள் சென்று அரசு மருத்துவமனை வழியாக வரவேண்டும். மேலும், ஆட்டோக்களில் அரசு அனுமதித்ததைவிட அதிக பயணிகளை ஏற்றிச் செல்கின்றனா். அதே போல் அதிக அளவில் மாணவா்களை ஏற்றிச் செல்கினறனா்.
போக்குவரத்து காவலா்கள்...
பள்ளி,கல்லூரி நேரங்களில் தூயநெஞ்ச கல்லூரி, பேருந்து நிலைய அணுகு சாலை,நகர காவல் நிலைய அணுகு சாலை, புதுப்பேட்டை அணுகு சாலை, சேலம்-கிருஷ்ணகிரி அணுகுசாலை, தருமபுரி-கிருஷ்ணகிரி அணுகு சாலை பகுதிகளில் போக்குவரத்து காவலா்கள் சில தினங்கள் மட்டுமே போக்குவரத்து சீரமைப்பில் ஈடுபடுகின்றனா். தினமும் போக்குவரத்து சீரமைப்பில் ஈடுபட காவலா்களை நியமிக்க வேண்டும் என்பதே திருப்பத்தூா் நகர மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.