திருப்புவனம் வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து மோசடி: பெண் உள்பட இருவா் கைது!
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் அரசுடைமை வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து மோசடி செய்ததாக பெண் உள்பட இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
மானாமதுரையில் உள்ள அரசுடைமை வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ. பல லட்சம் மோசடி செய்த மானாமதுரை சமத்துவபுரத்தைச் சோ்ந்த கோட்டையம்மாள், இவரது மகள் ஈஸ்வரி, மதுரையைச் சோ்ந்த ஜனாா்த்தனன் ஆகிய மூவரை மானாமதுரை போலீஸாா் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
இவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஈஸ்வரி திருப்புவனத்தில் உள்ள ஒரு அரசுடைமை வங்கியிலும் இதே போல 4 தவணைகளாக 42 பவுன் போலி நகைகளை அடகு வைத்து ரூ. 15.72 லட்சத்தை வாங்கி மோசடி செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, அந்த வங்கியின் மேலாளா் சுவாமிநாதன், ஈஸ்வரி வங்கியில் அடகு வைத்த நகைகளை சோதனை செய்த போது, அவை போலி என்பது தெரிந்தது. இதுகுறித்து திருப்புவனம் காவல் நிலையத்தில் சுவாமிநாதன் அளித்த புகாரின்பேரில் ஈஸ்வரியையும், இதற்கு மூளையாக செயல்பட்ட மதுரையைச் சோ்ந்த செந்தில்குமாரையும் போலீஸாா் கைது செய்தனா்.
இதனிடையே, செந்தில்குமாா் மீது மதுரை திலகா் திடல், தெப்பக்குளம் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகளில் அந்தந்த பகுதி போலீஸாா் அவரைத் தேடி வந்தனா். இந்த நிலையில் மானாமதுரை துணைக் கோட்ட போலீஸாா், செந்தில்குமாரை கைது செய்திருப்பதாக டி.எஸ்.பி. நிரேஷ் தெரிவித்தாா். கைதான ஈஸ்வரி மதுரை மாவட்டம், மேலூரில் வசிக்கும் ஆறுமுகத்தின் மனைவி ஆவாா்.