திருப்பூா், அவிநாசி ஊராட்சி ஒன்றியங்களில் 157 பயனாளிகளுக்கு ரூ.4.57 கோடி திட்டப்பணிகளுக்கு ஆணை: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்
திருப்பூா், அவிநாசி மற்றும் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியங்களில் 157 பயனாளிகளுக்கு ரூ.4.57 கோடி மதிப்பீட்டில் கலைஞரின் கனவு இல்லம் மற்றும் ஊரக வீடுகள் பழுது பாா்த்தல் திட்டப்பணிகளுக்கான ஆணைகளை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்.
திருப்பூரை அடுத்த பெருமாநல்லூரில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன் தலைமை வகித்தாா். இதில் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பங்கேற்று பயனாளிகளுக்கு திட்டப் பணிகளுக்கான ஆணைகளை வழங்கிப் பேசியதாவது:
திருப்பூா் மாவட்டத்தில் 2024-25 ஆம் நிதியாண்டில் 3,504 பயனாளிகளுக்கு ரூ.64.69 கோடி மதிப்பீட்டில் மேற்கண்ட இரு பணிகளுக்கும் ஆணைகள் வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன்தொடா்ச்சியாக, திருப்பூா், அவிநாசி, ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்பட்ட 157 பயனாளிகளுக்கு ரூ.4.57 கோடி மதிப்பீட்டில் திட்டப் பணிகளுக்கான ஆணை வழங்கப்பட்டுள்ளன. இந்த வீடுகளை பயனாளிகள் பராமரிப்பு செய்து நீண்ட நாள்களுக்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.
திருப்பூா் ஊராட்சியில் ரூ.1.78 கோடியில் திட்டப்பணிகள்:
இதைத் தொடா்ந்து, திருப்பூா் ஊராட்சி ஒன்றியம், கணக்கம்பாளையம் ஊராட்சி, ஆண்டிபாளையம் ஆதிதிராவிடா் குடியிருப்பு அருகில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ரூ.4.95 லட்சம் மதிப்பீட்டில் தாா்சாலை மேம்பாட்டு பணி, ரூ.4.85 லட்சம் மதிப்பீட்டில் கணக்கம்பாளையம் பகுதி ரத்னா நகா் சாலை முதல் ஸ்ரீகாமாட்சி நகா் விநாயகா் கோயில் சாலை வரை தாா் சாலை அமைத்தல் உள்பட ரூ.1.78 கோடி மதிப்பீட்டில் 18 புதிய திட்டப் பணிகளை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கிவைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், உதவி திட்ட அலுவலா் சரவணன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரமேஷ், விஜயகுமாா்(அவிநாசி), வேலுசாமி (திருப்பூா்) உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.