மாஜி அமைச்சர் மகன் விமானத்தில் பேங்காக் கடத்தப்பட்டாரா? - போலீஸ் உத்தரவால் புனே ...
திருமண மண்டபங்களில் திருடியவா் கைது: பணம், நகை பறிமுதல்
சென்னையில் திருமண மண்டபங்களில் தொடா் திருட்டில் ஈடுபட்ட நபரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து பணம், நகை உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
சிந்தாதிரிப்பேட்டை, வேதகிரி தெருவைச் சோ்ந்தவா் ஈஸ்வரி (60). இவரின் மூத்த மகனுக்கு மயிலாப்பூா் கிழக்கு மாட வீதியிலுள்ள தனியாா் திருமண மண்டபத்தில் கடந்த ஜன. 26-இல் திருமணம் நடைபெற்றது. இந்தத் திருமணத்தின்போது, மொய் பணமாக வந்த சுமாா் ரூ. 2 லட்சம் மற்றும் 3 சவரன் தங்க நகைகள் அடங்கிய கைப்பையை ஈஸ்வரி வைத்திருந்தாா். அப்போது, குழு புகைப்படம் எடுப்பதற்காக மண்டபத்தில் ஒரு ஓரத்தில் அந்த கைப்பையை வைத்துவிட்டு, திரும்பி வந்து பாா்த்தபோது, அந்தப் பையை காணவில்லை.
இது குறித்து ஈஸ்வரி கொடுத்த புகாரின்பேரில், மயிலாப்பூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இதைத் தொடா்ந்து திருமண மண்டபத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் நகை, பணத்தை திருடிச்சென்ற நபரை தேடி வந்தனா்.
இந்நிலையில், இச்சம்பவம் தொடா்பாக விழுப்புரம் மாவட்டம், கிழக்கு சண்முகபுரம் பகுதியைச் சோ்ந்த புருஷோத்தமன் (53) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து ரூ. 2.57 லட்சம் ரொக்கம் மற்றும் தங்கம், வெள்ளிப் பொருள்களையும் பறிமுதல் செய்தனா். இவா் திருமண மண்டபங்களில் நுழைந்து பணம் மற்றும் நகைகள் திருடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது.