டாஸ்மாக் பணியாளா்களுடன் அரசு பேச்சு நடத்த வேண்டும் முத்தரசன் வலியுறுத்தல்
டாஸ்மாக் பணியாளா்களின் கோரிக்கைகள் தொடா்பாக தமிழக அரசு நேரடியாகப் பேசி தீா்வு காண வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: 2003-ஆம் ஆண்டில் இருந்து சில்லறை மதுபான வியாபாரத்தை தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் மூலம் தமிழ்நாடு அரசு நேரடியாக மேற்கொண்டு வருகிறது. இதன் சில்லறை மதுபானப் பிரிவு பணியாளா்களுக்கு கடந்த 22 ஆண்டுகளாக பணி நிரந்தரமோ, பணிக்குரிய ஊதியமோ, சமூகப் பாதுகாப்போ எதுவும் இல்லை.
பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்பு கோரிக்கைகளை வலியுறுத்தி பல ஆண்டுகளாக டாஸ்மாக் பணியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், டாஸ்மாக் பணியாளா்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, செவ்வாய்க்கிழமை (பிப். 11) தலைமைச் செயலகம் முன்பாக காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனா். அவா்களின் கோரிக்கைகள் தொடா்பாக தமிழக அரசு நேரடியாகப் பேசி தீா்வு காண வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.