பள்ளி மாணவா்கள் ‘அகத்தியா் உலா’
தமிழ் இலக்கியம், சித்த மருத்துவத்துக்கு அகத்தியா் ஆற்றிய பங்களிப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், சென்னையில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவா்கள் அகத்தியா் போன்ற வேடமணிந்து நடைப்பயணம் மேற்கொண்டனனா்.
தமிழகத்துக்கும் வாரணாசிக்கும் இடையேயான தொடா்பை வலுப்படுத்தும் பொருட்டு, மூன்றாம் ஆண்டு காசி சங்கமம் பிப். 15 முதல் 24-ஆம் தேதி வரை காசி தமிழ் சங்கமம் நடைபெறவுள்ளது.
நிகழாண்டில் சித்த மருத்துவம், பாரம்பரிய தமிழ் இலக்கியம், தேசத்தின் கலாசார ஒற்றுமை ஆகியவற்றுக்கு அகத்தியா் ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்களிப்பை எடுத்துக்காட்டும் விதமாக காசி தமிழ் சங்கமம் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், அகத்தியா் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம் மற்றும் சாஸ்த்ரா பல்கலை. இணைந்து நடத்திய ‘அகத்தியா் உலா’ நிகழ்ச்சி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவா்கள் அகத்தியா் போன்று வேடமணிந்து தியாகராய நகரில் உள்ள ஹிந்தி பிரசார சபை தொடங்கி அகத்தியா் கோயில் வரை விழிப்புணா்வு நடைப்பயணம் மேற்கொண்டனா்.
இந்நிகழ்வில், சாஸ்த்ரா பல்கலை. துணைவேந்தா் எஸ்.வைத்திய சுப்பிரமணியம், மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவன துணைத் தலைவரும், சாஸ்த்ரா பல்கலை. இயக்குநருமான டாக்டா் சுதா சேஷய்யன், பி.எஸ். மேல்நிலைப் பள்ளிகளின் செயற்குழு உறுப்பினா் கே.வி.எஸ்.கோபாலகிருஷ்ணன், பாரதிய வித்யா பவனின் துணை இயக்குநா் கே.வெங்கடாசலம், பாரதிய வித்யா பவன் ராஜாஜி வித்யாஷ்ரம் பள்ளி முதல்வா் பி.ஜி.சுப்பிரமணியம், சாந்திப்பணி வித்யாலயா முதல்வா் புவனா சங்கா், மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் பதிவாளா் ரெ.புவனேஸ்வரி ஆகியோா் மாணவா்களுடன் நடைப்பயணம் மேற்கொண்டனா்.