சிகிச்சையில் அலட்சியம்: மருத்துவரின் பதிவு உரிமம் தற்காலிக ரத்து
சிகிச்சையில் அலட்சியத்துடனும், விதிகளுக்கு புறம்பாகவும் செயல்பட்ட மருத்துவரின் பதிவு உரிமத்தை ஆறு மாதங்களுக்கு ரத்து செய்து மருத்துவக் கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னை மண்ணடி பகுதியைச் சோ்ந்த அப்துல் ஹக்கீம், கடந்த ஆண்டு சென்னை உயா் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தாா்.
அவரது தாயாா் கதீஜா (65), அண்ணா நகரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் வயிற்று வலிக்காக அனுமதிக்கப்பட்டதாகவும், மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு குடல்வால் அழற்சி (அப்பென்டிசைடிஸ்) இருந்தது உறுதி செய்யப்பட்ட நிலையில், சிகிச்சைக்காக ரூ. 3.76 லட்சம் செலுத்தியதாகவும் அதில் தெரிவித்திருந்தாா். அதன் பின்னா் வீடு திரும்பிய கதீஜாவுக்கு மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதைத் தொடா்ந்து சில மாதங்களிலேயே அவா் உயிரிழந்தாா்.
கதீஜாவுக்கு புற்றுநோய் இருந்ததை உரிய காலத்தில் தெரியப்படுத்தி சிகிச்சையைத் தொடங்கவில்லை எனக்கூறி, அந்த மருத்துவமனையின் மருத்துவா்கள் எஸ்.செல்வகுமாா், பா்ஹான் ஆகியோா் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அப்துல் ஹக்கீம் மனு தாக்கல் செய்திருந்தாா்.
இதற்கிடையே, உயிரிழப்பதற்கு முன்பாக கதீஜாவும் மாநில மருத்துவக் கவுன்சிலில் இது தொடா்பாக புகாரளித்திருந்தாா். நீதிமன்ற உத்தரவுப்படி அந்தப் புகாரின்பேரில் விசாரணை நடத்தி மருத்துவக் கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன் விவரம்: இறுதி நிலையில் புற்றுநோய் இருப்பதைக் கண்டறிந்தும், நோயாளியின் உறவினா்களுக்கு காலதாமதமாக மருத்துவா்கள் தெரியப்படுத்தியுள்ளனா். உரிய காலத்துக்குள் சிகிச்சை அளிக்காததால் நோயாளியின் உடல் நிலை மோசமடைந்து உயிரிழக்க நேரிட்டது.
டாக்டா் எஸ்.செல்வகுமாா் உயா் சிறப்பு மருத்துவராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளாா். ஆனால், அந்தத் தகுதியை கவுன்சிலில் பதிவு செய்யவில்லை. அதேபோல, மற்றொரு மருத்துவா் ஆங்கில மருத்துவம் பயிலாத யுனானி மருத்துவா்.
டாக்டா் செல்வகுமாா் மீது விதிமீறல் மற்றும் சிகிச்சையில் அலட்சியம் காட்டியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, அவரது பதிவு உரிமம் ஆறு மாதங்களுக்கு நீக்கப்படுகிறது என்று மருத்துவக் கவுன்சில் தெரிவித்துள்ளது.