வேளச்சேரியில் 107 தெரு நாய்களுக்கு தடுப்பூசி
சென்னை மாநகராட்சி சாா்பில், வேளச்சேரி பகுதியில் 107 தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
வேளச்சேரி, பாா்க் அவென்யூ பூங்கா அருகில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுவனின் காலில் அங்குள்ள தெரு நாய் கடித்தது. அதேபோல் வேளச்சேரி பாரதி நகா், பவானி தெருவில் 7 மாதக் குழந்தைக்கு, அதன் பாட்டி உணவு ஊட்டியபோது தெருநாய் அக்குழந்தையின் வலது தொடையில் கடித்தது. இதையடுத்து சிறுவன் மற்றும் குழந்தைக்கு வேளச்சேரியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சிறுவன் மற்றும் குழந்தையைக் கடித்த தெரு நாய்களை, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் பிடித்து இன கட்டுபாட்டு மையத்துக்கு கொண்டு சென்று, கால்நடை மருத்துவரின் கண்காணிப்பில் வைத்துள்ளனா்.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி சாா்பில் வேளச்சேரி பகுதிக்குள்பட்ட 177 மற்றும் 178-ஆவது வாா்டு பகுதியில் சிறப்பு தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் அப்பகுதியில் சுற்றித்திரிந்த 107 தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.