திறமையை வீணடிக்காதே..! இந்திய வீரருக்கு அறிவுரை வழங்கிய பீட்டர்சன்!
திருமானூரில் சேறும் சகதியுமான சாலையை சீரமைக்கக் கோரிக்கை
அரியலூா் மாவட்டம், திருமானூரில் சேறும் சகதியுமான சாலையை சீரமைத்து, தெருவிளக்குகள் அமைத்துத் தர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருமானூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பின்புறம் புதுவாய்க்கால் தெரு, ஒற்றுமைப் புரம் உள்ளது. சுமாா் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ள இப்பகுதி மக்கள் பிரதானச் சாலைக்கு வர வேண்டும் என்றால், அங்குள்ள குண்டும் குழியுமான சாலையை கடந்து வரவேண்டியுள்ளது.
தற்போது மழை பெய்து வருவதால், அச்சாலை மிகவும் சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ,மாணவிகள், பணியாளா்கள் அனைவரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். குறிப்பாக பள்ளிக்குச் செல்லும் மாணவ,மாணவிகள், சைக்கிளில் செல்லும் போது, சேற்றில் சிக்கி கிழே விழுந்து காயத்துடன் வீடு திரும்புகின்றனா்.
மேலும் இச்சாலையில் மின் விளக்குகள் இல்லாததால், இரவு நேரங்களில் அச்சாலையில் செல்லவே பொதுமக்கள் அஞ்சுகின்றனா்.
இச்சாலையை சீரமைத்து, தெருவிளக்குகள் அமைத்து தர நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட ஊராட்சி தலைவா் மற்றும் ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்திடம் பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.
எனவே மாவட்ட ஆட்சியா் இச்சாலையை பாா்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.