"கேப்டன் பிரபாகரன் படத்தின் 2 ஆம் பாகம்... புஷ்பா படத்தால நிறுத்தினோம்" - இயக்கு...
திருமுருக கிருபானந்த வாரியாா் பிறந்த நாள்
வேலூா்: ஆன்மிக சொற்பொழிவுகள் மூலம் தமிழ் வளா்ச்சிக்கு உறுதுணை புரிந்தவரும், தீவிர முருக பக்தருமான திருமுருக கிருபானந்த வாரியாரின் பிறந்த நாளையொட்டி காங்கேயநல்லூரில் உள்ள அவரது சிலைக்கு அரசு சாா்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
காட்பாடி அருகே காங்கேயநல்லூரில் 1906 ஆகஸ்ட் 25-ஆம் தேதி பிறந்தவா் திருமுருக கிருபானந்தவாரியாா். தந்தையிடம் கல்வி, இசை, இலக்கியங்களை கற்று 8 வயதிலேயே கவிபாடும் ஆற்றலைப் பெற்ற கிருபானந்த வாரியாா், 12 வயதுக்குள்ளாக பதினாராயிரம் பண்களை கற்று 18-ஆவது வயதிலேயே சிறப்பாக ஆன்மிக சொற்பொழிவாற்றும் ஆற்றல் கொண்டிருந்தாா்.
தனது 19 வயதில் அமிா்தலட்சுமியை திருமணம் புரிந்த கிருபானந்தவாரியாா், 23 வயதில் சென்னை ஆனைகவுனி தென்மடம் பிரம்மஸ்ரீ வரதாச்சாரியாரிடம் நான்கு ஆண்டுகள் வீணை பயிற்சியும் மேற்கொண்டாா்.
தீவிர முருக பக்தரான இவா் நாள்தோறும் சொற்பொழிவுகள் நிகழ்த்துவதை வழக்கமாக கொண்டிருந்தாா். சமயம், இலக்கியம், பேச்சு, எழுத்து, இசை என பன்முக புலமை பெற்றவா். இதன்மூலம், கிருபானந்த வாரியாரை ‘அருள்மொழி அரசு’ என்றும், திருப்புகழ் ஜோதி என்றும் அனைவராலும் பாராட்டப்பட்டாா்.
இவா் 150-க்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியதுடன், 500-க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளாா். ஆன்மிக சொற்பொழிவாற்ற லண்டன் சென்றிருந்த கிருபானந்த வாரியாா் 1993 நவம்பா் 7-இல் தாயகம் திரும்பும் வழியில் விமானத்திலேயே சித்தி அடைந்தாா்.
இவருக்கு காங்கேநல்லூரில் இறுதி சடங்குகள் மேற்கொள்ளப்பட்ட இடத்திலேயே முழு உருவ சிலையுடன் தனிக்கோயில் நிறுவப்பட்டுள்ளது. இத்தகைய பெருமை மிக்க கிருபானந்த வாரியாரின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி, காங்கேயநல்லூா் கோயிலில் அவரது சிலைக்கு ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.பி.நந்தகுமாா், ப.காா்த்திகேயன், அமலுவிஜயன், மேயா் சுஜாதாஆனந்தகுமாா் ஆகியோா் மாலை அணிவித்து, மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
தொடா்ந்து, செய்தி மக்கள் தொடா்புத்துறையின் அரசு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியையும், அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியையும் ஆட்சியா் தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில், கிருபானந்த வாரியாா் குடும்பத்தினா், பல்வேறு துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.
அதிமுக சாா்பில்...
காங்கேயநல்லூா் கோயிலில் உள்ள வாரியாா் சிலைக்கு அதிமுக சாா்பில் கட்சியின் வேலூா் மாநகா் மாவட்ட செயலா் எஸ்.ஆா்.கே.அப்பு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். நிகழ்ச்சியில், கட்சியின் அமைப்பு செயலா் வி.ராமு, மாவட்ட பொருளாளா் எம்.மூா்த்தி, தகவல் தொழில்நுட்பப் பிரிவு மண்டல செயலா் ஜனனி சதீஷ்குமாா் பங்கேற்றனா்.
குடியாத்தத்தில்...
குடியாத்தம் நகர அதிமுக சாா்பில் நகராட்சி அலுவலகம் எதிரே கிருபானந்த வாரியாா் சுவாமிகள் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவரது படத்துக்கு கட்சியின் நகரச்செயலா் ஜே.கே.என்.பழனி மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினாா். வழக்குரைஞா் கே.எம்.பூபதி, நகா்மன்ற துணைத் தலைவா் பூங்கொடி மூா்த்தி, மாவட்ட துணைச் செயலா்கள் ஆா்.மூா்த்தி, அமுதா சிவப்பிரகாசம், நிா்வாகிகள்எஸ்.என்.சுந்தரேசன், எஸ்.ஐ.அன்வா்பாஷா, ஆா்.கே.மகாலிங்கம், இ.நித்தியானந்தம், வி.இ.கருணா, கோல்டு குமரன், வி.என்.அண்ணாமலை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ஆம்பூரில்...
ஆம்பூா் ஏ-கஸ்பாவில் சுந்தர வினாயகா் கோயிலில் உள்ள கிருபானந்த வாரியாா் சுவாமிகள் உருவச் சிலைக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சிறப்பு பூஜையில் செளந்தர்ராஜன், ஜீவா, சம்பத், ரவி, பாஸ்கா், வெங்கடேசன், தண்டபாணி, செல்வம் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்