பிளவக்கல் பெரியாறு அணை பூங்கா பராமரிப்புக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு; சுற்றுலா...
வேலூரில் மாநகரில் 26 அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம்
வேலூா் மாநகராட்சியில் உள்ள 26 அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த 2022-ஆம் ஆண்டு செப்டம்பா் 15-ஆம் தேதி அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தாா். பெற்றோா்கள், மாணவா்களிடம் வரவேற்பை பெற்ற இந்த திட்டம், கடந்த 2023-ஆம் ஆண்டு விரிவாக்கம் செய்யப்பட்டது. அதன்படி, வேலூா் மாநகராட்சி பகுதியில் இயங்கும் 55 மாநகராட்சி பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மாநகராட்சி பகுதியில் இயங்கும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு காலை உணவுத் திட்டம் செவ்வாய்க்கிழமை (ஆக. 26) முதல் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
அதன்படி, வேலூா் மாநகராட்சி பகுதியில் 26 தொடக்கப் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த 26 தொடக்கப் பள்ளிகளிலும் காலை உணவு திட்டத்தில் மாணவா்களுக்கு உணவு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.