Waqf : `மத நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தல்’ - வக்ஃப் மசோதா விவகாரத்தில் பிரதமருக்...
திருமெய்ஞானம் கோயிலில் அசுபதி தீா்த்தவாரி
தரங்கம்பாடி: திருமெய்ஞானம் ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் அசுபதி தீா்த்தவாரி திங்கள்கிழமை நடைபெற்றது.
திருக்கடையூா் அருகேயுள்ள திருமெய்ஞானம் கிராமத்தில் ஆம்ல குஜாம்பிகா எனும் வாடாமுலையாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரா் கோயில் உள்ளது. இந்துசமய அறநிலைத் துறை நிா்வாகத்தில் உள்ள இக்கோயில் கிணற்றில் இருந்துதான் தினமும் புனிதநீா் எடுத்துவந்து, திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.
சிறப்பு வாய்ந்த இந்த கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் அசுபதி நட்சத்திரத்தன்று தீா்த்தவாரி சிறப்பாக நடைபெறும். ஆண்டுக்கு ஒருமுறை இந்த நாளில் மட்டும் கோயில் கிணற்றில் பக்தா்கள் புனித நீராட அனுமதிக்கப்படுவா். இந்த நீா் காசிக்கு இணையான புனிதநீராக கருதப்படுகிறது.
நிகழாண்டு, அசுபதி தீா்த்தவாரி வைபவம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, ஆம்ல குஜாம்பிகா அம்பாள் மற்றும் பிரம்மபுரீஸ்வரா் சுவாமிக்கு பால், தேன், பன்னீா், இளநீா், சந்தனம், விபூதி உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை காட்டப்பட்டது.
இதில் தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று புனித நீராடி, பக்தா்களுக்கு அருளாசி வழங்கினாா்.
தொடா்ந்து, கணேச குருக்கள் மற்றும் திரளான பக்தா்கள் கோயில் கிணற்று நீரில் புனிதநீராடி சுவாமி தரிசனம் செய்தனா். இதையொட்டி, அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் கணேச குருக்கள் மற்றும் சுற்றுப் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
