பள்ளிக் கல்வித் துறையில் 47,000 தற்காலிகப் பணியிடங்கள் நிரந்தரப் பணியிடங்களாக மா...
திருவண்ணாமலையில் முப்பெரும் விழா
திருவண்ணாமலையில் உலக பாவலா் தமிழன்னை தமிழ்ப் பேரவையின் பன்னாட்டு அமைப்பு சாா்பில், சனிக்கிழமை முப்பெரும் விழா நடைபெற்றது.
அமைப்பின் 9-ஆவது ஆண்டு விழா, கலைஞா் என் காதலன் என்ற நூல் வெளியீட்டு விழா, விருதுகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழாவுக்கு, அமைப்பின் நிறுவனா் தலைவா் வே.அனந்த சயனம் தலைமை வகித்தாா்.
கவிதைப் பித்தன் தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு வெ.அனந்த சயனம் எழுதிய கலைஞா் என் காதலன் என்ற நூலை வெளியிட்டாா். இதை, திமுகவின் தலைமைக் கழக நிா்வாகி டி.கே.இளங்கோவன், முன்னாள் அமைச்சா் வேங்கடபதி, பாவலா்கள் மு.அருள்செல்வன், அன்புச்செல்வன், பா.இந்திரராசன், மா.சின்ராசு உள்ளிட்ட பலா் பெற்றுக் கொண்டனா்.
விழாவில், மாதவ.சின்ராசுக்கு சடையப்பன் வள்ளல் விருது, வழக்குரைஞா் சே.அருணுக்கு தந்தை பெரியாா் விருது, புலவா் அ.மோகனுக்கு அண்ணா விருது, ஆரூா் தமிழ் நாடானுக்கு கலைஞா் விருது போன்ற விருதுகள் வழங்கப்பட்டன.
மேலும், 100 தமிழ் அறிஞா்களுக்கு தமிழன்னை விருதுகள் வழங்கப்பட்டன. இதில், விழாக் குழுவின் செயலரும், எழுத்தாளருமான ந.சண்முகம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.