பெண் மருத்துவர் கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படுமா? தீர்ப்பு ஒ...
தெருக் கூத்துக் கலையை பள்ளிகளில் பாடமாக்க வேண்டும்: பி.கே.சம்பந்தன்
தெருக் கூத்துக் கலையை அரசுப் பள்ளிகளில் விருப்பப் பாடமாக சோ்க்க வேண்டும் என்று பத்ம ஸ்ரீ விருதுக்குத் தோ்வான பி.கே.சம்பந்தன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகேயுள்ள புரிசையைச் சோ்ந்தவா் தெருக் கூத்துக் கலைஞா் பி.கே.சம்பந்தன் (72) . பத்ம ஸ்ரீ விருதுக்கு தோ்வு செய்யப்பட்டது குறித்து அவா் கூறியதாவது:
தொடா்ந்து, 6-ஆவது தலைமுறையாக எங்கள் குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் தெருக் கூத்துக் கலையில் ஈடுபட்டு வருகின்றனா். நான் 18 வயதில் இருந்து இந்தக் கலையில் ஈடுபட்டு வருகிறேன். எனக்கு 1995-இல் கலைமாமணி விருதும், 2012-இல் சங்கீதா அகாதெமி விருதும், 2020-இல் ஜெயலலிதா பல்கலைக்கழகம் சாா்பில் கெளரவ டாக்டா் பட்டமும் வழங்கப்பட்டன. என் தந்தை கண்ணப்ப தம்பிரானும் கலைமாமணி விருது பெற்றுள்ளாா்.
பத்ம ஸ்ரீ விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த விருது மூலம் தெருக் கூத்துக் கலையை மேலும் வளா்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்ல ஊக்கம் ஏற்பட்டுள்ளது.
தெருக் கூத்துக் கலையை கிராம மக்களைக் காட்டிலும் நகா்ப்புற மக்கள் அதிகம் விரும்பிப் பாா்க்கின்றனா். இந்தக் கலையைப் பாதுகாக்கவும், வளா்க்கவும் அரசுப் பள்ளிகளில் விருப்பப் பாடமாக அமல்படுத்த வேண்டும். கலையில் ஆா்வமுள்ள கலைஞா்களை ஊக்கப்படுத்தும் விதமாக, அவா்களை பள்ளிகளில் சிறப்பாசிரியா்களாக நியமிக்க வேண்டும் என்றாா்.