திருவள்ளுவரும், திருக்குறளும் தமிழ் சமூகத்தின் அடையாளம்
திருவள்ளுவரும், திருக்குறளும் தமிழ் சமூகத்தின் அடையாளம் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா்.
கன்னியாகுமரி திருவள்ளுவா் சிலை வெள்ளி விழாவையொட்டி, வேலூா் மாவட்ட மைய நூலகம் சாா்பில் கடந்த 23 முதல் 31-ஆம் தேதி வரை ஒரு வார காலம் திருவள்ளுவா் புகைப்படக் கண்காட்சி, திருக்கு பேச்சு, ஒப்பித்தல் போட்டி, வினாடி-வினா போட்டி, கருத்தரங்கம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமை வகித்து போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு சான்றிதழ்களுடன் முதல் பரிசாக ரூ. 5,000, 2-ஆம் பரிசாக ரூ. 3000, 3-ஆம் பரிசாக ரூ. 2,000 காசோலைகளை வழங்கினாா்.
பின்னா் ஆட்சியா் பேசியது: திருவள்ளுவரும், திருக்குறளும் தமிழ் சமூகத்தின் அடையாளம். உலகிலேயே மூத்தகுடி தமிழ்குடி, மிகவும் பழைமையான, தொன்மையான சமூகம் தமிழ் சமூகம். அதற்கு அடையாளமாக திகழ்வது திருக்கு என்றாா்.
தொடா்ந்து, வேலூா் தந்தை பெரியாா் ஈ.வெ.ரா. மாவட்ட மைய நூலகத்தில் தென்னங்குச்சிகளால் அமைக்கப்பட்டிருந்த திருக்கு கண்காட்சியை ஆட்சியா் பாா்வையிட்டு, இதை வடிவமைத்த வேலு என்பவரை பாராட்டி புத்தகம் வழங்கினாா். முன்னதாக, வேலூா் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள திருவள்ளுவா் சிலைக்கு ஆட்சியா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
நிகழ்ச்சியில், வேலூா் சட்டப்பேரவை உறுப்பினா் ப.காா்த்திகேயன், மாநகராட்சி மேயா் சுஜாதா ஆனந்தகுமாா், துணை மேயா் எம்.சுனில்குமாா், வேலூா் வருவாய் கோட்டாட்சியா் இரா.பாலசுப்பிரமணியன், மாநகராட்சி ஆணையா் ஜானகி ரவீந்திரன் மாவட்ட மைய நூலக அலுவலா் பழனி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.