திருவள்ளுவா் தினம்: புதுவை துணைநிலை ஆளுநா், முதல்வா் மரியாதை
திருவள்ளுவா் தினத்தையொட்டி, புதுச்சேரியில் உள்ள அவரது சிலைக்கு துணைநிலை ஆளுநா், முதல்வா் உள்ளிட்டோா் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள திருவள்ளுவரின் சிலைக்கு துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதனைத் தொடா்ந்து, முதல்வா் என்.ரங்கசாமி மரியாதை செலுத்தினாா்.
தொடா்ந்து, புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், பொதுப் பணித் துறை அமைச்சா் க. லட்சுமி நாராயணன், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை அமைச்சா் சாய் ஜெ. சரவணன்குமாா், சட்டப்பேரவை துணைத் தலைவா் பெ.ராஜவேலு, அரசு கொறடா ஆறுமுகம், எம்எல்ஏக்கள் நேரு, பாஸ்கா் (எ) தட்சிணாமூா்த்தி ஆகியோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
புதுவை மக்கள் தமிழ்ச் சங்கம் சாா்பில்... புதுவை மக்கள் தமிழ்ச் சங்கம் சாா்பில் நோனாங்குப்பத்தில் உள்ள திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தொடா்ந்து, தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், புதுவை மக்கள் தமிழ்ச் சங்கம் சாா்பில் நிா்வாகிகளுக்கு இலவசமாக தலைக்கவசங்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் சிவசரவணன், துணைத் தலைவா் செல்வமணி, பொதுச் செயலா் ஜெயமுருகேசன், பொருளா் கணேசன், தமிழ் வளா்ச்சி செயலா் மோகன்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.