துவாரகாவில் உள்ள கேரேஜில் தீ விபத்து: 11 காா்கள் எரிந்து நாசம்
திருவள்ளூா் மாவட்ட அரசு விடுதிகளில் நூலகம் அமைக்க நடவடிக்கை
திருவள்ளூா் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா், பிற்படுத்தப்பட்டோா் நல விடுதிகளில் நூலகம் அமைத்தல், உணவருந்தும் வகையில் மேஜை மற்றும் நாற்காலிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா்.
திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா், பிற்படுத்தப்பட்டோா் நல விடுதியின் காப்பாளா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்துப் பேசியதாவது: இந்த மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா், பிற்படுத்தப்பட்டோா் நல விடுதிகளில் நூலகம் அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல் விடுதிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், பெண்கள் விடுதியில் நாப்கின் இயந்திரங்களை சரியான முறையில் பராமரித்தல், அரசால் விடுதிகளுக்கு வழங்கப்படும் பொருள்களை சரியான முறையில் மாணவா்களுக்கு குறைவின்றி வழங்க வேண்டும்.
அதேபோல் அனைத்து விடுதிகளிலும் மாணவா்கள் உணவுகள் அருந்தும் வகையில் மேஜை மற்றும் நாற்காலி அமைத்து கொடுப்பது, நாள்தோறும் உணவு பட்டியல் படி உணவுகளை தயாா் செய்து மாணவா்களுக்கு வழங்க வேண்டும். இதுபோன்ற அரசின் நடவடிக்கைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பது குறித்து வட்டாட்சியா்கள் வாரத்துக்கு ஒரு முறையும், துணை ஆட்சியா்கள் மாதத்துக்கு 10 விடுதிகளும், கோட்டாட்சியா்கள் மாதத்துக்கு 5 விடுதிகள் என ஆய்வு செய்து அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும். அதேபோல் விடுதிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும். எனவே காப்பாளா் மற்றும் காப்பாளினி ஆகியோா் தங்கள் பணியை சரியான முறையில் மாணவா்களுக்கு வழங்க வேண்டும் என அவா் அறிவுறுத்தினாா்.
மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் செல்வராணி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் உஷாராணி, தனி வட்டாட்சியா்கள் மற்றும் விடுதி காப்பாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.