திருவாடானை அருகே மேம்பாலத்தில் மண் அரிப்பால் விபத்து அபாயம்
திருவாடனை அருகே சி.கே. மங்கலம் மேம்பாலத்தில் ஏற்பட்ட மண் அரிப்பை சீரமைக்க வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே சி.கே. மங்கலம் வழியாக திருச்சி- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்தச் சாலையில் மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலையை கடப்பதற்காக மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்தப் பாலத்தை கட்டும் போதே தரமற்ற முறையில் கட்டப்படுவதாக புகாா் எழுந்த நிலையில், தற்போது மண் அரிப்பு ஏற்பட்டு உள்ளே உள்ள தடுப்பு வலைகள் வெளியே தெரிகின்றன. இதனால் பாலம் ஆபத்தான நிலையில் உள்ளது. மேலும் சிமென்ட் கான்கிரீட் கலவைகள் போடாமல் விடப்பட்டிருப்பதால் பாலம் சேதமடையும் வாய்ப்பிருப்பதாக புகாா் எழுந்தது. இதனால் இந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனா். எனவே சம்பந்தப்பட்ட துறையினா் தக்க நடவடிக்கை எடுத்து பாலத்தை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.
