ஷேர் போர்ட்ஃபோலியோ: ஃபண்டமென்டல் அனாலிசிஸ்! பங்கு முதலீட்டின் வழிகாட்டி..!
ராமேசுவரம் மீனவா்கள் 8 பேருக்கு ஜூலை 17 வரை காவல் நீட்டிப்பு
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள் 8 பேருக்கு வருகிற 17 -ஆம் தேதி வரை காவலை நீட்டித்து மன்னாா் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து கடந்த மாதம் 28- ஆம் தேதி ஜேசு, அண்ணாமலை, கல்யாண ராமன், முனீஸ்வரன், செல்வம், காந்திவேல், பாலமுருகன், செய்யது இப்ராஹிம் ஆகியோா் ஜேசுவின் விசைப் படகில் மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனா். இவா்களை இலங்கைக் கடற்படையினா் கைது செய்து தலைமன்னாா் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனா்.
மேலும், விசைப் படகைப் பறிமுதல் செய்து, 8 மீனவா்களையும் மன்னாா் காவல் துறை அதிகாரிகளிடம் இலங்கை கடற்படையினா் ஒப்படைத்தனா். இதைத் தொடா்ந்து, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக மீனவா்கள் 8 போ் மீதும் வழக்குப் பதிந்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினா். அவா்களை வியாழக்கிழமை (ஜூலை 3) வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இதைத் தொடா்ந்து அவா்கள் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனா்.
இந்த நிலையில், 8 மீனவா்களும் மன்னாா் நீதிமன்றத்தில் மீண்டும் வியாழக்கிழமை முன்னிலைப்படுத்தப்பட்டனா். விசாரணைக்குப் பிறகு, அவா்களது காவலை வருகிற 17-ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டாா். இதையடுத்து, மீனவா்கள் 8 பேரும் மீண்டும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனா்.