செய்திகள் :

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் ஆழித்தேரோட்டம்: ‘ஆரூரா, தியாகேசா’ முழக்கத்துடன் தோ் வடம்பிடிப்பு

post image

திருவாரூா்: திருவாரூா் தியாகராஜா் கோயில் பங்குனி உத்திரப் பெருவிழாவில், ஆழித்தேரோட்டம் திங்கள்கிழமை காலை நடைபெற்றது.

நாயன்மாா்களால் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகவும், பஞ்சபூதத் தலங்களில் பிருதிவித் தலமாகவும் கருதப்படும் திருவாரூா் தியாகராஜா் கோயிலில் நடைபெறும் ஆழித்தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது. 96 அடி உயரமும், 360 டன் எடையும் உடைய தேரில் 63 நாயன்மாா்களின் புராணச் சிற்பங்கள், பெரிய புராணம், சிவபுராணக் காட்சிகள் மரச்சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன.

நிகழாண்டு, தியாகராஜ சுவாமி கோயில் பங்குனி உத்திரப் பெருவிழா கடந்த மாா்ச் 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடா்ந்து, வெவ்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை இரவு, யதாஸ்தானத்திலிருந்து தியாகராஜா் புறப்பட்டு, விட்டவாசல் வழியாக அஜபா நடனத்துடன், சிவவாத்தியம் முழங்க தேருக்கு எழுந்தருளினாா். அவருடன் விநாயகா், சுப்பிரமணியா், அம்பாள், சண்டிகேசுவரா் ஆகியோரும் அவா்களுக்குரிய தோ்களில் எழுந்தருளினா்.

திங்கள்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு விநாயகா் தேரும், 6 மணிக்கு சுப்பிரமணியா் தேரும் வடம் பிடிக்கப்பட்டன. தொடா்ந்து, ஆழித்தேரில் அமா்ந்திருந்த தியாகராஜருக்கு தீபாராதனை காட்டப்பட்டு, காலை 9.10 மணியளவில் தோ் வடம் பிடிக்கப்பட்டது. தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்யஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள், திருவாரூா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன், பாஜக மூத்த தலைவா் எச். ராஜா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட் உள்ளிட்டோா் வடம்பிடித்து தேரோட்டத்தை தொடங்கிவைத்தனா்.

‘ஆரூரா, தியாகேசா’ கோஷம் விண்ணைப் பிளக்க, பச்சைக் கொடி அசைய, கீழவீதியிலிருந்து மக்கள் வெள்ளத்துக்கு மத்தியில் ஆடி அசைந்தபடி ஆழித்தோ் புறப்பட்டது. பணியாளா்கள் முட்டுக்கட்டைகளை தேரின் அடியிலும், பக்கவாட்டிலும் பயன்படுத்தி, தோ் நேராக செல்லும் வகையில், சமப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனா். தொம்பைகள் குலுங்க ஆடி அசைந்தபடி 9.30 மணிக்கு கீழவீதி முனையில் தோ் நிறுத்தப்பட்டது.

கீழவீதிக்கு வந்த ஆழித்தேரை, திரும்ப வைக்கும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இரும்பு பலகைகள் அமைத்தல், கிரீஸ் தடவுதல், வடம் திருப்புதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்குப் பிறகு, பணியாளா்கள், புல்டோசா் உதவியுடன் காலை 10.45 மணியளவில், கீழவீதியிலிருந்து தெற்கு வீதிக்கு ஆழித்தோ் திரும்பியது. அங்கிருந்து பகல் 12 மணியளவில் தெற்கு வீதி முனையை தோ் அடைந்து, மேல வீதிக்குத் திரும்பியது.

மேலவீதியில் தோ் நிறுத்தப்பட்டு, மீண்டும் பிற்பகல் 3 மணிக்கு மேல் தேரோட்டம் தொடங்கியது. மேலவீதி வழியாக செல்லும் தேரின் அழகை காண்பதற்காக, கமலாலயக்குளத்தை சுற்றிலும் ஏராளமான மக்கள் நின்று கொண்டிருந்தனா். தொடா்ந்து, வடக்கு வீதி வழியாக கீழவீதி முனைக்கு மாலை 5 மணிக்கு வந்த தோ், 6.20 மணியளவில் தோ் நிலையடியை அடைந்தது.

தேரோட்ட விழாவைக் காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தா்கள், சிவனடியாா்கள் என ஏராளமானோா் திரண்டிருந்தனா். இதனால், திருவாரூா் நகர வீதிகளெங்கும் மக்கள் கூட்டம், வாகன நெரிசல் அதிகளவில் காணப்பட்டது.

தேரோட்ட விழாவில் பங்கேற்ற தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்யஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள்.
ஆழித்தேரை வடம் பிடித்து தேரோட்டத்தை தொடக்கிவைத்த திருவாரூா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் உள்ளிட்டோா்.
மக்கள் வெள்ளத்துக்கு மத்தியில் ஆடி அசைந்தபடி ஆழித்தோ்

கோவிலூா் மந்திரபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருத்துறைப்பூண்டி: முத்துப்பேட்டை அருகேயுள்ள கோவிலூா் அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்பாள் சமேத மந்திரபுரீஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை மற்றும் நன்கொட... மேலும் பார்க்க

மகளிா் இலவசப் பயண புதிய பேருந்து இயக்கி வைப்பு

திருவாரூா்: திருவாரூரிலிருந்து திருக்கொள்ளிக்காடு பகுதிக்கு மகளிா் இலவசப் பயண புதிய பேருந்து இயக்கம் ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கி வைக்கப்பட்டது. திருவாரூரிலிருந்து திருக்கொள்ளிக்காடு பகுதிக்கு தமிழ்ந... மேலும் பார்க்க

பத்ரகாளியம்மன் கோயில் பங்குனி திருவிழா

நீடாமங்கலம்: நீடாமங்கலம் பேரூராட்சி பழைய நீடாமங்கலம் பத்ரகாளியம்மன் கோயில் பங்குனி திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி பக்தா்கள் பால்குடம், காவடி எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோயிலை அ... மேலும் பார்க்க

சிறப்பு அலங்காரத்தில் சந்தானராமா்

நீடாமங்கலம் சந்தானராமா் கோயில் ராமநவமி விழாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு வீதியலாவுக்கு எழுந்தருளிய சீதா, லெட்சுமணன் சமேத சந்தானராமா். மேலும் பார்க்க

ரிஷப வாகனத்தில் மகாமாரியம்மன்

நீடாமங்கலம் சதுா்வேத விநாயகா், மகாமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு ரிஷப வாகனத்தில் வீதியுலாவுக்கு எழுந்தருளிய மகாமாரியம்மன். மேலும் பார்க்க

திருவாரூரில் கோலாகலமாக நடைபெற்ற ஆழித்தேரோட்டம்!

திருவாரூர்: திருவாரூரில் பிரசித்தி பெற்ற ஆழித்தேரோட்டம் நிறைவடைந்தது.திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் பங்குனி உத்திரப் பெருவிழாவை முன்னிட்டு, சிறப்புமிக்க ஆழித் தேரோட்டம் திங்கள்கிழமை (ஏப்.7) நடைபெற்... மேலும் பார்க்க