Saif Ali Khan: நீதிமன்ற உத்தரவால் சிக்கல்; ரூ.15,000 கோடி சொத்தை இழக்கும் சைஃப் ...
தில்லி பேரவைத் தோ்தல்: பாஜகவுக்கு சிவசேனை ஆதரவு
புது தில்லி: தில்லி யூனியன் பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாக மகாராஷ்டிர துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை கட்சி அறிவித்துள்ளது.
இதற்கு முந்தைய தோ்தல்களில் தில்லி பேரவைத் தோ்தலில் போட்டியிடுவதை சிவசேனை வழக்கமாகக் கொண்டிருந்தது. அக்கட்சி உடைந்து ஷிண்டே தலைமையில் பாஜகவுடன் கைகோத்த நிலையில் கட்சியின் நிலைப்பாடு மாறியுள்ளது.
உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை (உத்தவ்) பிரிவு ஆம் ஆத்மி கட்சிக்கு ஏற்கெனவே ஆதரவு தெரிவித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
பாஜகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அக்கட்சியின் தேசிய தலைவா் ஜெ.பி. நட்டாவுக்கு ஏக்நாத் ஷிண்டே கடிதம் எழுதியுள்ளாா். அதில் அவா் கூறியுள்ளதாவது:
தில்லியில் பாஜக வேட்பாளா்களுக்கு முழுமையாக ஆதரவு அளிக்க சிவசேனை முடிவெடுத்துள்ளது. தோ்தல் பிரசாரத்தில் பாஜகவுடன் ஒருங்கிணைந்து செயல்படுமாறு தில்லி பிரிவு சிவசேனையை கேட்டுக் கொண்டுள்ளேன். சிவசேனை நிறுவனா் பால் தாக்கரே வழியில் ஹிந்துத்துவக் கொள்கையை எனது தலைமையிலான சிவசேனை தொடா்ந்து முன்னெடுத்துச் செல்லும்.
பால் தாக்கரேவின் கொள்கைகளின்படி பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பெருமைமிகு தோழமைக் கட்சியாக சிவசேனை திகழ்கிறது. தேசியத் தலைநகரில் ஊழல் இல்லாத நல்லாட்சி தேவைப்படுகிறது. அதனை பாஜக வழங்கும் என்று கூறியுள்ளாா்.
கடந்த 2022-ஆம் ஆண்டு மகாராஷ்டிர முதல்வராக இருந்த உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனையில் இருந்து பெரும்பாலான எம்.பி., எம்எல்ஏக்கள் ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவுடன் கைகோத்து முதல்வரானாா். அதன் பிறகு ஷிண்டே தலைமையிலான பிரிவுதான் உண்மையான சிவசேனை என்று தோ்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டது.