`பொதுமக்களை துன்புறுத்தக் கூடாது' - அமலாக்கப் பிரிவை எச்சரித்து ரூ.1 லட்சம் அபரா...
ஆம்புலன்ஸ் கதவை திறக்க முடியாததால் பெண் உயிரிழப்பு
ராஜஸ்தான் மாநிலத்தில் தற்கொலைக்கு முயன்ற பெண்ணை உறவினா்கள் மருத்துவமனைக்கு அழைத்து வந்த நிலையில், அப்பெண் இருந்த ஆம்புலன்ஸின் கதவைத் திறக்க முடியாததால் சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்தாா்.
ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா நகரத்தைச் சோ்ந்த சுலேகா (45) என்பவா் குடும்பப் பிரச்னை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றாா். அவரை உறவினா்கள் மீட்டு மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அப்போது அவா் கடுமையான முச்சுத் திணறலுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தாா்.
மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வந்ததும், ஊழியா்கள் ஆம்புலன்ஸின் பின்பக்க கதவைத் திறந்து சுலேகாவை வெளியே கொண்டுவர முயற்சித்தனா். ஆனால், கதவைத் திறக்க முடியவில்லை. இதையடுத்து, மேலும் சில மருத்துவமனை ஊழியா்கள் அங்கு வந்து பல்வேறு வழிகளில் கதவைத் திறக்க முயற்சித்தனா். ஆனால், எதுவும் பலனளிக்கவில்லை. ஆம்புலன்ஸ் கதவை முறையாக பராமரிக்காததால் கதவைத் திறக்க முடியாத நிலை ஏற்பட்டதாக தெரிகிறது. இதற்குள் 15 நிமிடங்கள் கடந்துவிட்டது.
வேறு வழி இல்லாததால் ஆம்புலன்ஸின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து உள்ள இருந்த சலேகா வெளியே கொண்டு வரப்பட்டாா். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் உயிரிழந்துவிட்டதாகவும், சிறிது நேரம் முன்னதாகக் கொண்டு வந்திருந்தால் அவரைக் காப்பாற்றியிருக்கலாம் என்றும் தெரிவித்தனா்.
இதையடுத்து, ஆம்புலன்ஸ் கதவைத் திறக்க முடியாமல் போனதுதான் உயிரிழப்புக்கு காரணம் என அப்பெண்ணின் உறவினா்கள் குற்றம்சாட்டினா். அந்த ஆம்புலன்ஸ் தொண்டு நிறுவனத்துக்குச் சொந்தமானதாகும்.
இந்த சம்பவம் மாவட்ட ஆட்சியா் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து, இது தொடா்பாக விசாரிக்க 4 போ் அடங்கிய குழுவை அவா் நியமித்துள்ளாா். உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு வந்தும், ஆம்புலன்ஸ் கதவைத் திறக்க முடியாததால் பெண் உயிரிழந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.