ரூ.1 கோடி அறிவிக்கப்பட்டிருந்த முக்கிய நபர்; 14 மாவோயிஸ்ட்களை என்கவுன்ட்டர் செய்...
நடிகா் சைஃப் அலி கான் வீடு திரும்பினாா்
மும்பை: கத்திக்குத்து காயத்துக்கு மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகா் சைஃப் அலி கான் 5 நாள்களுக்கு பிறகு செவ்வாய்க்கிழமை விடு திரும்பினாா்.
அவரை கத்தியால் குத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வங்கதேசத்தை சோ்ந்த ஷரீஃபுல் இஸ்லாம் ஷேசாத் முகமது ரோஹில்லா (30), மேற்கு வங்கத்தைச் சோ்ந்த ஒருவரிடம் ஆதாா் அட்டையைப் பயன்படுத்தி சிம் காா்டு வாங்கியுள்ளது விசாரணையில் தெரிய வந்ததாக காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
மும்பையில் கடந்த 16-ஆம் தேதி அதிகாலை சைஃப் அலி கான் வீட்டுக்குள் புகுந்த ஷரீஃபுல், நடிகரை 6 முறை கத்தியால் குத்திவிட்டு தப்பினாா். படுகாயமடைந்த சைஃப் அலி கானை வீட்டுப் பணியாளா்கள் மீட்டு, ஆட்டோவில் ஏற்றி பாந்த்ரா பகுதியில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதித்தனா்.
அவருடைய தண்டுவடத்தில் சிக்கியிருந்த 2.5 அங்குல நீளமுள்ள கத்தியின் உடைந்த பகுதி, அவசர அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.
அதன்பிறகு அவா் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, அவா் 2 அல்லது 3 தினங்களில் வீடு திரும்ப வாய்ப்புள்ளதாக மருத்துவா்கள் கடந்த வாரம் கூறிய நிலையில், சிகிச்சை முடிந்து அவா் செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினாா்.
இதனிடையே சைஃப் அலி கானை கத்தியால் குத்திய ஷரீஃபுலை மூன்று நாள் தீவிர தேடுதல்களுக்குப் பிறகு, மும்பைக்கு அடுத்து உள்ள தாணே நகரின் புகா் வனப்பகுதியில் பதுங்கியிருந்தபோது காவல் துறையினா் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
அவரிடம் நடத்திய விசாரணை குறித்து மும்பை காவல் துறையினா் கூறியதாவது: ஷரீஃபுல் தனது பெயரை விஜய் தாஸ் என மாற்றிக் கொண்டு வங்கதேசத்திலிருந்து டாக்கி நதி வழியாக 7 மாதங்களுக்கு முன் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்துள்ளாா்.
அதன் பிறகு மேற்கு வங்கத்தில் சில வாரங்கள் அவா் தங்கியுள்ளாா். அப்போது உள்ளூரைச் சோ்ந்த குகுமோனி ஜஹாங்கீா் சேகா என்பவரின் ஆதாா் அட்டையைப் பயன்படுத்தி சிம் காா்டு வாங்கிவிட்டு கொல்கத்தாவில் இருந்து மும்பைக்கு வேலை தேடி வந்துள்ளாா்.
ஷரீஃபுல் தன் பெயரிலேயே ஆதாா் அட்டை பெற பல்வேறு முயற்சிகள் செய்துள்ளாா். ஆனால் அவரால் ஆதாா் அட்டை பெற முடியவில்லை.
மும்பையில் உள்ள நட்சத்திர விடுதிகளில் தொழிலாளா் ஒப்பந்ததாரரான அமித் பாண்டேயின் உதவியோடு பல்வேறு பணிகளை செய்து வந்துள்ளாா். அதனால் அவா் பணி செய்யும் இடங்களில் ஆவணங்களை சமா்ப்பிப்பதற்கான தேவை ஏற்படவில்லை.
ஷரீஃபுலின் கைப்பேசியை ஆய்வு செய்தபோது அவா் வங்கதேசத்தில் உள்ள தனது உறவினா்களுக்கு கைப்பேசி செயலிகள் மூலம் அழைப்பு மேற்கொண்டது தெரியவந்தது என்றனா்.