தில்லியில் நிலநடுக்கத்தால் பூங்காவில் வேரோடு சாய்ந்த மரம்
தலைநகரில் உணரப்பட்ட நிலநடுக்கத்தில் தௌலா குவானில் உள்ள ஜீல் பூங்காவில் 20-25 ஆண்டுகள் பழமையான மரம் வேரோடு சாய்ந்தது.
நிலநடுக்கத்தையடுத்து பூங்காவில் ஏற்பட்ட சேதத்தை அதன் பராமரிப்பாளர்கள் உறுதி செய்தனர். ஏஎன்ஐயிடம் பேசிய காப்பாளர் மஹாவீர், "இன்று காலை 9 மணிக்கு பணிக்கு வந்தேன். வேரோடு சாய்ந்த மரத்தைப் பார்த்தேன். இது 20-25 ஆண்டுகள் பழமையான மரம். இங்கு காற்று, இடியுடன் கூடிய மழை என எதுவும் இல்லாததால் இது நிலநடுக்கத்தால் நடந்திருக்க வேண்டும்.
நிலநடுக்கத்தை தொடர்ந்து பூங்காவை சுற்றி பார்த்தபோது, மரம் விழுந்ததை கண்டுபிடித்ததாக தொழிலாளர்கள் தெரிவித்தனர். ஜீல் பூங்காவின் மற்றொரு காப்பாளர் ஜான்கி தேவி கூறுகையில், "வேரோடு சாய்ந்த மரத்தைத் தவிர வேறு எந்த சேதமும் இல்லை.. அதிகாலை 5.30 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. மிகவும் சக்திவாய்ந்த நடுக்கம் ஏற்பட்டது.
அதன் காரணமாக மரம் வேரோடு பிடுங்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது என்றார். தில்லி-என்சிஆர் பகுதிகளில் திங்கள்கிழமை அதிகாலை 5:36 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது ரிக்டர் அளவில் 4.0ஆகப் பதிவானது. நிலநடுக்கத்தால் சேதம் அல்லது காயம் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.
தில்லியை வழிநடத்த பாஜகவில் ஆளில்லை: அதிஷி
இந்த நிலநடுக்கம், புது தில்லியை மையமாகக் கொண்டு, பூமிக்கு அடியில் 5 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. தௌலா குவானில் உள்ள துர்காபாய் தேஷ்முக் சிறப்புக் கல்விக் கல்லூரிக்கு அருகில் இந்த நிலநடுக்கம் மையம்கொண்டிருந்தாக அதிகாரி ஒருவர் பிடிஐயிடம் தெரிவித்தார். நிலநடுக்கம் ஏற்பட்டபோது பலத்த சத்தமும் கேட்டதாக அந்த அதிகாரி மேலும் கூறினார்.
நிலநடுக்கத்தால் தில்லி, நொய்டா, கிரேட்டர் நொய்டா மற்றும் காசியாபாத் ஆகிய இடங்களில் உயரமான கட்டடங்களில் வசிப்பவர்கள் அவசரமாக வெளியேறி தெருக்களில் தஞ்சமடைந்தனர்.