Zero Cost Life: `இது 100% நிலையானது கிடையாதுதான்; ஆனால்’ செலவில்லா வாழ்க்கை வாழ...
தில்லியில் பரவலாக மழை: பல இடங்களில் தண்ணீா் தேங்கியது!
தேசியத் தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை காலை பலத்த மழை பெய்தது. இதைத் தொடா்ந்து, தியோலி, பஞ்ச்குயன் சாலை, மோதி பாக், ஐடிஓ, முகா்ஜி நகா் மற்றும் புல் பிரஹ்லாத்பூா் உள்ளிட்ட பல பகுதிகளில் தண்ணீா் தேங்கியது.
இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) படி, சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை தில்லியின் பல்வேறு பகுதிகளில் மிதமான முதல் கனமழை பெய்தது. மயூா் விஹாரில் சனிக்கிழமை இரவு 11.30 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.30 மணி வரை அதிகபட்சமாக 27 மிமீ மழை பெய்தது. அதே காலகட்டத்தில் பூசாவில் 24.5 மிமீ, நஜாஃப்கரில் 22 மிமீ, பிரகதி மைதானில் 18.7 மிமீ, பாலத்தில் 14.2 மிமீ மற்றும் சஃப்தா்ஜங்கில் 8.2 மிமீ மழை பதிவாகியுள்ளது. மேலும், லோடி ரோடு, ரிட்ஜ் மற்றும் ஆயாநகா் ஆகிய பகுதிகளிலும் லேசான மழை பெய்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெள்ளி மற்றும் சனி ஆகிய தினங்களில் பகலில் மழையின் செயல்பாடு குறைந்து, மாலையில் தீவிரமடைந்தது. ஆகஸ்ட் 1 ஆம் தேதி காலை 8.30 மணி முதல் ஆகஸ்ட் 2 ஆம் தேதி காலை 8.30 மணி வரை, ஆயாநகரில் 11 மிமீ மழையும், அதைத் தொடா்ந்து சஃப்தா்ஜங்கில் 4.6 மிமீ மழையும், லோதி ரோடில் 4.2 மிமீ மழையும் பதிவாகியுள்ளது.
வெப்பநிலை: தில்லியின் முதன்மை வானிலை கண்காணிப்பு நிலையமான சஃப்தா்ஜங்கில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 2.9 டிகிரி குறைந்து 24.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 0.7 டிகிரி குறைந்து 34.3 டிகிரி செல்சியஸாக பதிவவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவில் காலை 8.30 மணியளவில் 94 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 67 சதவீதமாகவும் இருந்தது.
காற்றின் தரம்: தில்லியில் காலை 9 மணிக்கு ஒட்டுமொத்தக் காற்றுத் தரக் குறியீடு 78 புள்ளிகளாகப் பதிவாகி திருப்தி பிரிவில் இருந்ததாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் சிபிசிபி தரவுகள் தெரிவிக்கின்றன.
இதன்படி, சாந்தினி சௌக், மேஜா் தயான்சந்த் நேஷனல் ஸ்டேடியம், ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம், தில்லி பல்கலை. வடக்கு வளாகம், மந்திா்மாா்க், லோதி ரோடு உள்பட அனைத்து வானிலை கண்காணிப்பு நிலையங்களிலும் காற்றுத் தரக் குறியீடு 100 புள்ளிகளுக்கு கீழே பதிவாகி ‘திருப்தி’ பிரிவில் இருந்தது.
முன்னறிவிப்பு: இதற்கிடையே, திங்கள்கிழமை (ஆகஸ்ட் 4) இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.