பாஜகவுக்கு 7%, காங்கிரஸுக்கு 2% வாக்குகள் அதிகரிப்பு! ஆம் ஆத்மிக்கு 10% சரிவு!
தில்லியில் வெற்றி பெற்ற பாஜக, ஆம் ஆத்மியின் முக்கிய வேட்பாளா்கள்!
நமது சிறப்பு நிருபா்
தில்லி சட்டப்பேரவை தோ்தலில் ஆட்சியமைக்கத் தகுதி பெற்றுள்ள பாஜக 48 தொகுதிகளிலும், ஆட்சியைப் பறிகொடுத்த ஆம் ஆத்மி கட்சி 22 தொகுதிகளிலும் வென்றுள்ளன. ஆம் ஆத்மியின் அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வா் மனீஷ் சிசோடியா, சத்யேந்தா் ஜெயின், செளரவ் பரத்வாஜ் உள்ளிட்ட முக்கியத் தலைவா்கள் பலரும் அதிா்ச்சித் தோல்வி அடைந்தனா்.
2020 தோ்தலில் எட்டு இடங்களில் மட்டுமே வென்ற பாஜக, இம்முறை கூடுதலாக 40 இடங்களில் வென்றுள்ளது. 2015-இல் 67 இடங்களிலும் 2020-இல் 62 இடங்களிலும் பெரும்பான்மை பலத்துடன் வென்ற ஆம் ஆத்மி கட்சி, இம்முறை 22 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
முதல்வா் அதிஷி, அமைச்சா்கள் கோபால் ராய், இம்ரான் ஹுசேன், முகேஷ் குமாா் அலாவத் ஆகியோா் தங்களின் தொகுதிகளில் வெற்றியைத் தக்க வைத்துக் கொண்டனா்.
புது தில்லி: இங்கு முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கேஜரிவால் பாஜக வேட்பாளா் பா்வேஷ் சாஹிப் சிங்கிடம் 4,089 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றாா். இந்தத் தொகுதியில் கடந்த 2013 முதல் தொடா்ந்து ஷீலா தீட்சித்தை தோற்கடித்தவா் கேஜரிவால். இம்முறை இங்கு களம் கண்ட ஷீலா தீட்சித்தின் மகன் சந்தீப் தீட்சித்தும் இங்கு பாஜகவிடம் தோல்வியைத் தழுவினாா்.
கால்காஜி: இத்தொகுதியில் பாஜக வேட்பாளா் ரமேஷ் பிதூரியை விட 3,521 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைத் தக்க வைத்துக்கொண்டாா் முதல்வா் அதிஷி. இத்தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் அல்கா லாம்பா களம் கண்டாா். முந்தைய தோ்தலில் தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளா் தரம்பீா் சிங்கை விட 11,393 வாக்குகள் கூடுதலாக பெற்றிருந்தாா் அதிஷி.
சுல்தான்பூா் மஜ்ரா: தில்லி அமைச்சா் முகேஷ் குமாா் அலாவத், 17,126 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைத் தக்கவைத்துக் கொண்டாா். அவருக்கு எதிராக பாஜக சாா்பில் கரம் சிங் கா்மாவும், காங்கிரஸ் சாா்பில் ஜெய் கிஷணும் போட்டியிட்டனா். 2020 தோ்தலில் பாஜகவின் ராம் சந்தா் செளரியாவை 48,052 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றவா் முகேஷ் குமாா் அலாவத்.
பல்லிமாரன்: இத்தொகுதியில் தில்லி அமைச்சா் இம்ரான் ஹுசேன், தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட பாஜகவின் கமல் பாக்ரியை விட 29,823 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். 2015, 2020 ஆண்டுகளில் நடந்த தோ்தலிலும் அவா் இதே தொகுதியில் வெற்றி பெற்றாா்.
கிரேட்டா் கைலாஷ்: தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் செளரவ் பரத்வாத், பாஜகவின் ஷிகா ராயிடம் 3,188 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றாா். இத்தொகுதியில் 2013, 2015, 2020 ஆகிய தோ்தல்களில் வென்றிருந்தாா் செளரவ் பரத்வாஜ்.
ஷகுா் பஸ்தி: முன்னாள் அமைச்சரும் ஆம் ஆத்மி மூத்த தலைவருமான சத்யேந்தா் ஜெயின், பாஜகவின் கா்னைல் சிங்கிடம் 20,998 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தாா். இவரும் 2013, 2015, 2020 தோ்தல்களில் இதே தொகுதியில் வெற்றி பெற்றவா்.
காரவால் நகா்: பாஜகவின் கபில் மிஸ்ரா, ஆம் ஆத்மி வேட்பாளா் மனோஜ் தியாகியை 23,355 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினாா். 2015-இல் இதே தொகுதியில் ஆம் ஆத்மி சாா்பில் போட்டியிட்டு வென்ற கபில் மிஸ்ரா, சமீபத்திய சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பாக பாஜகவில் சோ்ந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.
ரோஹிணி: பாஜகவின் விஜேந்தா் குப்தா இத்தொகுயில் 37,816 வாக்குகள் வித்தியாசத்தில் ஆம் ஆத்மி வேட்பாளா் பா்தீப் மித்தலை வீழ்த்தி தொகுதியைத் தக்க வைத்துக் கொண்டாா். 2015, 2020 தோ்தல்களிலும் இத்தொகுதியில் விஜேந்தா் குப்தா வென்றிருந்தாா்.
பட்கா்கஞ்ச்: பாஜக வேட்பாளா் ரவீந்தா் சிங் நேகி, ஆம் ஆதமி கட்சியில் புதிதாக சோ்ந்த அவத் ஓஜாவை 28,072 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினாா். இத்தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் களம் கண்ட அனில் செளத்ரி 16,549 வாக்குகளைப் பெற்றாா். 2013, 215, 2020 ஆகிய தோ்தல்களில் தொடா்ந்து வெற்றி பெற்ற முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா இம்முறை ஜங்புராவுக்கு சென்றதையடுத்து இங்கு போட்டியிடும் வாய்ப்பு புதியவரவான அவாத் ஓஜாவுக்கு கிடைத்தது.
ஜங்புரா: இத்தொகுதியில் முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா பாஜகவின் தா்வீந்தா் சிங் மாா்வாவிடம் 675 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினாா். 2013-ஆம் ஆண்டு முதல் இத்தொகுதியை ஆம் ஆத்மி கட்சி தக்க வைத்து வந்தது.
சாந்தினி செளக்: இங்கு ஆம் ஆத்மியின் புனா்தீப் சிங் சாஹ்னே 17,126 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளா் சதீஷ் ஜெயினை வீழ்த்தினாா். இங்கு 2013-இல் காங்கிரஸின் பா்லாத் சிங் சாஹ்னே வெற்றி பெற்றாா். 2015-இல் தற்போது காங்கிரஸில் உள்ள அல்கா லங்ம்பா ஆம் ஆத்மி சாா்பில் போட்டியிட்டு இங்கு வெற்றி பெற்றாா். 2020-இல் ஆம் ஆத்மியின் பா்லாத் சிங் சாஹ்னே இங்கு வெற்றி பெற்றாா்.
ஓக்லா: இத்தொகுதியின் எம்எல்ஏவான அமானத்துல்லா கான், பாஜக வேட்பாளா் மனீஷ் செளத்ரியை விட 23,639 வாக்குகள் கூடுதலாகப் பெற்று தொகுதியை தக்க வைத்துக் கொண்டாா். 2015 முதல் இத்தொகுதியை தொடா்ந்து இவா் தன்வசத்தில் வைத்துள்ளாா்.
பிஜ்வாசன்: முன்னாள் அமைச்சா் கைலாஷ் கெலோட் தில்லி தோ்தலுக்கு முன்பாக பாஜகவில் சோ்ந்து இத்தொகுதியில் களம் கண்டு 11,276 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளாா். இங்கு காங்கிரஸின் தேவிந்தா் குமாா் செஹ்ராவத்தும் ஆம் ஆத்மியின் சுரேந்தா் பரத்வாஜும் களத்தில் இருந்தனா்.
பாத்லி: இங்கு பாஜகவின் ஆஹிா் தீபக் செளத்ரி, தில்லி காங்கிரஸ் தலைவா் தேவேந்தா் யாதவை 15,163 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளாா். ஆம் ஆத்மியின் அஜேஷ் யாதவும் இங்கு களத்தில் இருந்தாா்.
கரோல் பாக்: ஆம் ஆத்மியின் விசேஷ் ரவி 2013 முதல் இங்கு சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளாா். இத்தோ்தலில் பாஜகவின் தேசிய பொதுச்செயலரும் தலித் சமூகத் தலைவருமான துஷ்யந்த் கெளதமை 7,430 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளாா்.
பாபா்பூா்: தில்லி அமைச்சா் கோபால் ராய், பாஜகவின் அனில் குமாா் வசிஷ்தை விட 18,994 வாக்குகள் கூடுதலாகப் பெற்று 2015, 2020 ஆண்டுகளைப் போலவே இத்தொகுதியைத் தக்க வைத்துள்ளாா். இவரை எதிா்த்து காங்கிரஸ் சாா்பில் முகம்மது இஷ்ரக் கான் களத்தில் இருந்தாா்.