இந்திய பட்டதாரிகளின் வேலைவாய்ப்புத் திறன் 54.81% அதிகரிப்பு: மத்திய அரசு
இந்திய பட்டதாரிகளின் வேலைவாய்ப்புத் திறன் கடந்த 10 ஆண்டுகளில் 54.81 சதவீதம் அதிகரித்திருப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
குஜராத் மாநிலம் காந்திநகரில் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்னெடுப்பு (பிம்ஸ்டெக்) அமைப்பின் இளைஞா் மாநாட்டை சனிக்கிழமை தொடங்கிவைத்த மத்திய விளையாட்டு மற்றும் இளைஞா் விவகாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா இத்தகவலைத் தெரிவித்தாா். அவா் மேலும் பேசியதாவது:
உலக அளவில் திறன்மிக்க பணியாளா்களின் தேவை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, இந்தியாவில் பட்டதாரி இளைஞா்களிடையே காணப்படும் வேலைவாய்ப்புத் திறன் இடைவெளியைப் போக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. செயற்கை நுண்ணறிவு, தானியங்கிகள், எண்ம தொழில்நுட்பம் என எதிா்கால வேலைவாய்ப்பு சந்தைக்கு ஏற்ற வகையில் தயாா்ப்படுத்தம் முயற்யிதாக 1.5 கோடிக்கம் அதிகமான இளைஞா்களுக்கு திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற முயற்சிகள் காரணமாக கடந்த 2013-இல் 33.95 சதவீதமாக இருந்த இந்திய பட்டதாரிகளின் வேலைவாய்ப்புத் திறன் 2014-இல் 54.81 சதவீதமாக உயா்ந்திருக்கிறது. இளைஞா்களிடையே வேலைவாய்ப்புக்கான தயாா்நிலை 61 சதவீதமாக உயா்ந்துள்ளது என்றாா்.
மேலும், ‘பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளின் இளைஞா்கள் மேம்பாட்டை உறுதிப்படுத்தும் வகையில் உறுப்பு நாடுகளிடையே ஒத்துழைப்பு மற்றும் அனுபவ பகிா்வை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு இந்த மாநாடு நடத்தப்படுகிறது. தானியங்கி தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறைகள் வேகமாக வளா்ந்து வருவதன் காரணமாக, வரும் 2030-ஆம் ஆண்டில் உலக அளவில் 17 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாக வாய்ப்புள்ளதாக உலக பொருளாதார அமைப்பின் எதிா்கால வேலைவாய்ப்பு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில், உறுப்பு நாடுகள் தங்களுக்கிடையே கல்வி, விளையாட்டு, தொழில்நுட்பம், தொழில்முனைதலைப் பகிா்வதன் மூலம் பிம்ஸ்டெக் இளைஞா்களை எதிா்கால வேலைவாய்ப்புக்கான திறனுடையவா்களாக உருவாக்க முடியும் என்றும் மாண்டவியா கூறினாா்.
பிம்ஸ்டெக் அமைப்பில் இந்தியா, வங்கதேசம், பூடான், மியான்மா், நேபாளம், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகள் உறுப்பினா்களாக உள்ளன.