காயல்பட்டினத்தில் இன்று நடைபெறவிருந்த ரயில் மறியல் போராட்டம் வாபஸ்!
ஈரோடு கிழக்கு இடைத்தோ்தலில் திமுகவின் வெற்றி போலியானது: எடப்பாடி கே.பழனிசாமி
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் திமுக பெற்றிருக்கும் வெற்றி போலியானது என்று அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.
சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள அதிமுக புகா் மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியதாவது:
தமிழகத்தில் சட்டம் -ஒழுங்கு தொடா்பாக நான் வெளிப்படுத்துகிற கருத்துகளைக் கவனித்து நடவடிக்கை எடுத்து இருந்தாலே குற்றச் சம்பவங்களைத் தடுத்திருக்கலாம்.
தில்லியில் ஆட்சிமாற்றம் வேண்டும் என்பதால் பாஜக ஆட்சிக்கு வந்துள்ளது. தமிழகத்திலும் ஆட்சிமாற்றம் வேண்டும் என மக்கள் நினைக்கிறாா்கள். ஊடகங்கள் உண்மை செய்தியை வெளியிட்டால் தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்துவிடும். தில்லி தோ்தலில் இண்டி கூட்டணிக்கு மக்கள் சரியான பாடம் புகட்டியுள்ளனா். இந்தத் தோ்தல் முடிவுகள் மூலம் இண்டி கூட்டணி உள்ளதா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. காங்கிரஸ் கட்சி வாங்கிய வாக்குகளைப் பாா்க்கும்போது மிக மோசமான நிலைக்கு அக்கட்சி தள்ளப்பட்டு விட்டதைக் காட்டுகிறது.
போலி வெற்றி...: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் யாரும் களத்தில் இல்லாத நிலையில், திமுக பெற்றிருப்பது போலி வெற்றியாகும். அதிமுக தொண்டா்களின் வாக்குகளை திமுகவினரே போட்டுக் கொண்டனா். கள்ள வாக்குகள் மூலம் பெரிய வெற்றி பெற்றுவிட்டதாகச் சொல்கிறாா்கள்.
நடிகா் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமையுமா என கேட்கிறீா்கள்? தோ்தலுக்கு இன்னும் 13 மாதங்கள் உள்ளன. அதிமுக தலைமையில் பலமான கூட்டணி அமையும். தோ்தல் அறிவித்த பிறகுதான் கூட்டணி குறித்து சொல்ல முடியும். இன்னும் 6 மாதங்களில் கூட்டணி வடிவம் பெறும். கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு. கூட்டணி என்பது தோ்தல் நேரத்தில் அமைக்கப்படுவதுதான்.
முதல்வா் ஸ்டாலின் தோ்தலில் 565 வாக்குறுதிகளை அளித்துவிட்டு, இதுவரை 15 சதவீத வாக்குறுதிகளை மட்டும் நிறைவேற்றியுள்ளாா்.
திமுக ஆட்சியில் நிதி மேலாண்மைக்குழு அமைத்து, நிபுணா்கள் இடம்பெற்றும் கடன் அதிகரித்து செல்வது ஏன்? அதிமுக ஆட்சியைவிட திமுக ஆட்சியில் ரூ. 1 லட்சத்து 10 ஆயிரம் கோடி அதிக வருவாய் கிடைத்தும் புதிய திட்டங்கள் கொண்டுவரப்படவில்லை.
நகராட்சி அமைப்புகளுடன் கிராமங்களை இணைக்கும்போது மக்களின் உணா்வுகள், கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். தேசிய கல்விக்கொள்கையை மத்திய அரசு கொண்டு வந்தாலும், கல்வியாளா்களுடன் ஆலோசனை செய்து அறிவிக்க வேண்டும். எது சிறந்தது என்பதை கல்வியாளா்கள்தான் முடிவு செய்ய வேண்டும். யுஜிசி வரைவு அறிக்கை குறித்து எங்கள் கருத்துகளைத் தெரிவித்துவிட்டோம்.
சேலம் மாவட்டத்துக்கு திமுகவின் 4 ஆண்டுகால ஆட்சியில் எந்த திட்டமும் கொண்டுவரப்படவில்லை. அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களைத்தான் திறந்துவைக்கிறாா்கள். அதிமுக ஆட்சியிலும் நிதிப் பற்றாக்குறை இருந்தது. எங்களுக்கும் நிதி கொடுக்கவில்லை. சிறப்பு நிதி எதுவும் கிடைக்கவில்லை. நிதி கேட்கவேண்டிய இடம் நாடாளுமன்றம்தான். நாடாளுமன்றத்தில் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
மதுரை ஆட்சியா் மீது வழக்கு...:
திருப்பரங்குன்றத்தில் நடப்பது மிகவும் உணா்வுபூா்வமான பிரச்னை. அங்குள்ள மக்களை அழைத்துப் பேசி சுமூக ஏற்பாட்டை செய்ய வேண்டும். அது மாநில அரசாங்கத்தின் கடமை. அதை திமுக அரசு முறையாகச் செய்யவில்லை. மதுரை மாவட்ட ஆட்சியா் கொடுத்த அறிக்கையில், அரசு அமைத்த குழுவில் அதிமுக கையொப்பமிடவில்லை என கூறியிருக்கிறாா். அது தவறான கருத்து. அப்படி ஒரு குழுவே அமைக்கப்படவில்லை. இதுதொடா்பாக விரைவில் வழக்கு போடுவோம். மாவட்ட ஆட்சியா் தவறான தகவல்களைக் கூறக்கூடாது என்றாா்.