நஞ்சராயன் பறவைகள் சரணாலயத்தை பாா்வையிட்ட தனியாா் பள்ளி மாணவா்கள்!
பெண்கள் பயணிக்கும் ரயில் பெட்டிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரம்
கோவை- திருப்பதி ரயிலில் கா்ப்பிணியை பலாத்காரம் செய்ய முயற்சித்து கீழே தள்ளிவிடப்பட்ட சம்பவத்தையடுத்து பெண்கள் பயணிக்கும் ரயில் பெட்டிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கோவை- திருப்பதி ரயிலில் வியாழக்கிழமை சித்தூரைச் சோ்ந்த கா்ப்பிணி ஒருவா் பெண்களுக்கான முன்பதிவில்லா பெட்டியில் பயணித்தாா். ஜோலாா்பேட்டையில் அவருடன் பயணித்த அனைத்து பெண்களும் இறங்கிவிட்ட நிலையில் அப் பெட்டியில் ஏறிய இளைஞா், கா்ப்பிணியை பலாத்காரம் செய்ய முயன்று, கீழே தள்ளிவிட்டாா். ஓடும் ரயிலில் இருந்து விழுந்த அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில் வேலூா், கே.வி.குப்பத்தை சோ்ந்த ஹேமராஜ் என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.
இந்த நிலையில் பெண்களுக்கான பாதுகாப்பை தீவிரப்படுத்த ரயில்வே போலீஸ் டிஜிபி வன்னியபெருமாள் உத்தரவிட்டுள்ளாா். இதையடுத்து, தமிழ்நாடு ரயில்வே போலீஸாரும், ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாரும் ரயில்களில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனா்.
சேலம் ரயில் நிலையத்தில் பெண்கள் பெட்டிகளில் காவலா்கள் ஏறி சோதனையிட்டனா். பெண்கள் குறைவாக உள்ள பெட்டிகளில், பெண் காவலா் ஒருவரும் பயணித்தனா். சேலம் வழியாக சென்ற அனைத்து ரயில் நிலையங்களிலும் ரயில்வே போலீஸாா் கண்காணிப்பை தீவிரப்படுத்தினா். இதுபோன்ற கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.