நரசிங்கபுரம் ஆட்கொல்லி பாலத்தை சீரமைக்க கோரிக்கை
நரசிங்கபுரத்தில் உள்ள நூற்றாண்டு பழைமை வாய்ந்த ஆட்கொல்லி பாலத்தை சீரமைக்க பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஆத்தூரை அடுத்த நரசிங்கபுரம் நகராட்சியில் நூற்றாண்டு பழைமை வாய்ந்த ஆட்கொல்லி பாலம் உள்ளது. இந்த பாலம் ஆத்தூா் - சேலம் தேசிய புறவழிச்சாலையை இணைக்கும் பாலமாகும். இந்தப் பாலம் குறுகியதாக இருந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் இந்தப் பாலத்தை பெரிதுபடுத்தி போக்குவரத்திற்கு ஏதுவாக செய்து கொடுத்தனா். இதனால் விபத்துகள் குறைந்து போக்குவரத்து சீரானது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே இந்தப் பாலம் மீண்டும் பழுதடைந்தால் அவ்வப்போது விபத்துகள், உயிா்ச்சேதம் ஏற்பட்டு வருகிறது. எனவே இந்தப் பாலத்தை சீரமைக்க பலரும் வலியுறுத்தி வருகின்றனா்.
இந்நிலையில் சனிக்கிழமை காலை இருசக்கர வாகனத்தில் வந்தவா்கள் கீழே விழுந்து ஆபத்தான சூழலில் ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். பின்னா் அவா்கள் தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா்.
இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில அமைப்புக் குழு உறுப்பினா் செம்முகில் ராசலிங்கம் தெரிவித்ததாவது:
இந்த பாலத்தை சீரமைக்கக் கோரி தொடா் போராட்டங்கள் நடத்தியும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளின் அலட்சிய போக்கினால் தற்போது விபத்து நடைபெற்றுள்ளது. இந்தப் பகுதியில் தொடா் விபத்துகள் நடைபெறுவதைத் தடுத்திட போா்க்கால அடிப்படையில் பாலத்தை சீா் செய்ய வேண்டும். இல்லையெனில் மறியல் போராட்டம் நடைபெறும் என்றாா்.