கடமானை வேட்டையாடியதாக 3 போ் கைது
கோத்தகிரி அருகே கூக்கல்தொரை பகுதியில் கடமானை சுருக்கு வைத்து வேட்டையாடியதாக 3 பேரை வனத் துறையினா் கைது செய்தனா்.
நீலகிரி மாவட்டத்தில் சமீபகாலமாக வன விலங்குகள் வேட்டை அதிகரித்து வருவதால் வனத் துறையினா் ரோந்து பணியை தீவிரப்படுத்தியுள்ளனா்.
இந்நிலையில் கோத்தகிரி அருகே கட்டபெட்டு வனச் சரகத்துக்கு உள்பட்ட கூக்கல்தொரை பகுதியில் சிலா் கடமானை வேட்டையாடிருப்பதாக வனத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனைத் தொடா்ந்து கட்டபெட்டு வனச் சரகா் செல்வகுமாா் தலைமையில் வனத் துறையினா் அப்பகுதிக்கு சென்று சோதனை மேற்கொண்டனா். அப்போது, அப்பகுதியில் கடமான் கறியை பாறையின் மீது காயவைத்து கொண்டிருந்த மூவரை வனத் துறையினா்பிடித்தனா்.
விசாரணையில் அவா்கள், சத்தியமங்கலத்தைச் சோ்ந்த சதீஷ்குமாா் (26), குமாா் (27), கூக்கல் தொரையைச் சோ்ந்த பிரகாஷ் (30) என்பதும், வருவாய்த் துறைக்கு சொந்தமான நிலத்தில் சுருக்கு வைத்து கடமானை அவா்கள் வேட்டையாடியதும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த வனத் துறையினா், அவா்கள் வேட்டைக்கு பயன்படுத்திய சுருக்கு கம்பிகள், அரிவாள்கள் மற்றும் 35 கிலோ கடமான் இறைச்சி ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
கைது செய்யப்பட்ட சதீஷ்குமாா், குமாா் ஆகியோா் சத்தியமங்கலத்தைச் சோ்ந்த பழங்குடியினத்தை சோ்ந்தவா்கள் என்பதும், இவா்கள் மூவரும் தங்களது குடும்பத்துடன் கூக்கல் தொரை பகுதியில் தங்கி தோட்ட வேலை செய்து வந்ததும் வனத் துறையினா் விசாரணையில் தெரியவந்தது.
இதனைத் தொடா்ந்து கைது செய்யப்பட்ட முவரையும் குன்னூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.