காயல்பட்டினத்தில் இன்று நடைபெறவிருந்த ரயில் மறியல் போராட்டம் வாபஸ்!
ஆம் ஆத்மி - காங்கிரஸ் கூட்டணி அமைத்திருத்தால் பாஜக தோற்றிருக்கும்: உத்தவ் கட்சி கருத்து
தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டிருந்தால் பாஜக தோல்வியடைந்திருக்கும் என்று சிவசேனை (உத்தவ்) பிரிவு தலைவா் சஞ்சய் ரெளத் தெரிவித்துள்ளாா்.
மும்பையில் சனிக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அவா் மேலும் கூறியதாவது:
தில்லியில் ஆம் ஆத்மி கட்சியை முழுமையாக மக்கள் பணியாற்ற பாஜக அனுமதிக்கவில்லை. ஒருபுறம் துணைநிலை ஆளுநா் அதிகாரத்தைச் செலுத்தினாா். மறுபுறம் ஆம் ஆத்மியின் முக்கியத் தலைவா்கள் பலரையும் மத்திய பாஜக அரசு பல்வேறு வழக்குகளைப் போட்டு சிறைக்கு அனுப்பி வந்தது. மகாராஷ்டிரத்தில் செய்ததுபோலவே எதிா்க்கட்சிகளைச் சோ்ந்தவா்களை முடக்கும் அனைத்து வேலைகளையும் பாஜக தில்லியிலும் செய்து வந்தது.
மகாராஷ்டிர தோ்தலிலும் பல முறைகேடுகளில் பாஜக ஈடுபட்டது. திடீரென லட்சக்கணக்கான வாக்காளா்கள் பட்டியலில் சோ்க்கப்பட்டனா். தில்லியிலும் இதேபோன்ற முறைகேடுகளை நடத்தினா். இந்த விஷயத்தில் தோ்தல் ஆணையம் கண்களை மூடிக் கொண்டது.
தில்லியில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் கூட்டணி அமைத்திருத்தால் சிறப்பாக இருந்திருக்கும். இக்கூட்டணியிடம் பாஜக நிச்சயமாகத் தோல்வியடைந்திருக்கும். ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுமே பாஜகவுக்கு எதிராக தனித்தனியாக போராடின. அவா்கள் இணைந்து தோ்தலைச் சந்தித்திருக்க வேண்டும். அப்போது பாஜகவை வீழ்த்தியிருக்கலாம். இதில் இருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்றாா்.