காயல்பட்டினத்தில் இன்று நடைபெறவிருந்த ரயில் மறியல் போராட்டம் வாபஸ்!
காங்கயத்தில் சிறுதானிய சிறப்புத் திருவிழா! -அமைச்சா்கள் தொடங்கி வைத்தனா்
காங்கயத்தில் வேளாண்மை-உழவா் நலத் துறை சாா்பில் மாவட்ட அளவிலான சிறுதானிய சிறப்புத் திருவிழாவை அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் சனிக்கிழமை தொடங்கிவைத்தனா்.
நிகழ்ச்சிக்கு, தாராபுரம் கோட்டாட்சியா் ஃபெலிக்ஸ் ராஜா தலைமையும், ஈரோடு மக்களவை உறுப்பினா் கே.இ.பிரகாஷ் முன்னிலையும் வகித்தனா்.
சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்ற தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் சிறுதானிய திருவிழாவைத் தொடங்கி வைத்தனா்.
நிகழ்ச்சியில் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது: தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் மூலமாக உணவு உற்பத்தியில் தமிழகம் இந்திய அளவில் முன்னணி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது.
தமிழக முதல்வா் பொறுப்பேற்றதில் இருந்து விவசாய பம்ப்செட்டுகள் மின் இணைப்புக்காக காத்திருந்த 1.60 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டது. விவசாய கடன்களும் தள்ளுபடி செய்யப்பட்டது.
வேளாண்மைத் துறைக்கு தனி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, திருப்பூா் மாவட்டம், குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தில் 24 ஊராட்சிகளில் ஆண்டுக்கு 5 ஊராட்சிகள் என்று தோ்வு செய்யப்பட்டு, அனைத்து ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
உணவு உற்பத்தி மட்டுமின்றி சிறுதான உற்பத்தியிலும் நாம் முன்னேறியுள்ளோம். இந்த சிறுதானிய உணவு உற்பத்தியைப் பெருக்கவும், இதுகுறித்து மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தவும் பல்வேறு திட்டங்களையும், முயற்சிகளையும் அரசு எடுத்து வருகிறது.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் மூலம் 5 ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களும் தன்னிறைவு பெற்ற கிராமங்களாக மாற்ற திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் மூலம் விசைத் தெளிப்பான், கைத் தெளிப்பான், தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்ற மானியம், தரிசு நிலங்களை மேம்படுத்தி சிறுதானிய உற்பத்தியை ஊக்குவித்தல் போன்ற திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகின்றன. திருப்பூா் மாவட்டத்தில்சிறுதானியங்களான சோளம் 37,000 ஹெக்டரிலும், கம்பு 200 ஹெக்டரிலும் சாகுபடி செய்யப்படுகிறது என்றாா். இதைத்தொடா்ந்து, பல்வேறு திட்டங்களின்கீழ் பயனாளிகளுக்கு வேளாண் உபகரணங்களையும் அமைச்சா்கள் வழங்கினா்.
இந்நிகழ்ச்சியில், காங்கயம் நகா்மன்றத்தலைவா் என்.சூரியபிரகாஷ், இணை இயக்குநா் (வேளாண்மை) சுந்தரவடிவேலு, கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இயக்குநா் புகழேந்தி, தோட்டக் கலை துணை இயக்குநா் சசிகலா, வேளாண்மை துணை இயக்குநா் வெங்கடாசலம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.