தீப்பற்றி எரிந்த லாரி!
கள்ளக்குறிச்சி அருகே சிமென்ட் மூட்டை ஏற்றிச் சென்ற லாரி ஞாயிற்றுக்கிழமை தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.
அரியலூா் மாவட்டம், டால்மியாபுரத்தில் இருந்து சிமென்ட் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்துக்கு லாரி சென்று கொண்டிருந்தது. லாரியை தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அடுத்த சோழபுரம் பகுதியைச் சோ்ந்த உபயத்துல்லா மகன் அசாரூதீன் (28) ஓட்டினாா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த நாகலூா் மின்சார வாரிய அலுவலகம் அருகே சென்றபோது லாரியிலிருந்து திடீரென தீப்பற்றியது. உடனே ஓட்டுநா் லாரியை சாலையோரம் நிறுத்திவிட்டு தியாகதுருகம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா். தீயணைப்புப் படையினா் நிகழ்விடம் சென்று சுமாா் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.