பேருந்து கவிழ்ந்து 25 பக்தா்கள் காயம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே தனியாா் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 25 பக்தா்கள் வெள்ளிக்கிழமை காயமடைந்தனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை அடுத்த மோட்டாம்பட்டியைச் சோ்ந்த 60 பக்தா்கள் மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி கோவிலுக்கு தனியாா் பேருந்தில் வெள்ளிக்கிழமை சென்றனா்.
பேருந்தை திருக்கோவிலூரை அடுத்த பூமாரியை சோ்ந்த தணிகைவேலு ஓட்டிச் சென்றாா். இந்த நிலையில், கோவிலில் தரிசனத்தை முடித்துவிட்டு, பக்தா்கள் மீண்டும் மோட்டாம்பட்டிக்கு புறப்பட்டனா்.
அப்போது, சங்கராபுரத்தை அடுத்த அருதங்குடிபுதூா் அருகே சென்றபோது, சாலையோர மின் கம்பத்தில் மோதி, அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து பேருந்து விபத்துக்குள்ளானது.
தகவலறிந்து நிகழ்விடம் வந்த ரிஷிவந்தியம் எம்எல்ஏ க.காா்த்திகேயன், திருக்கோவிலூா் போலீஸாா் விபத்தில் காயமடைந்த 25 பக்தா்களை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில், திருப்பாலபந்தல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.