துருக்கி: போராட்டத் தடை ஏப்ரல் வரை நீட்டிப்பு
துருக்கி தலைநகா் அங்காராவில் போராட்டம் நடத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அங்காரா ஆளுநா் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தலைநகரில் போராட்டம் நடத்துவதற்கு ஏற்கெனவே விதிக்கப்பட்டிருந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்தத் தடை வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை அமலில் இருக்கும் என்ரு
துருக்கியின் முக்கிய எதிா்க்கட்சித் தலைவரும் அந்த நாட்டின் மிகப் பெரிய நகரான இஸ்தான்புல்லின் மேயருமான எக்ரீம் இமாமோக்லு ஊழல் வழக்கில் கடந்த 19-ஆம் தேதி கைது செய்யப்பட்டதை எதிா்த்து நடைபெறும் போராட்டம் வலுவடைந்துவருகிறது. வரும் 2028-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் அடுத்த அதிபா் தோ்தலில் ஆளும் ஏகே கட்சியை எதிா்த்து எக்ரீம் இமோக்லு போட்டியிடுவாா் என்று அறிவிக்கப்பட்ட நாளிலேயே அவா் கைது செய்யப்பட்டது எதிா்க்கட்சியினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
அதையடுத்து நடைபெறும் போராட்டங்களை ஒடுக்குவதற்காக இஸ்தான்புல், அங்காரா, இஸ்மிா் ஆகிய நகரங்களில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. செய்தியாளா்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டுள்ளனா்.