துல்கர் சல்மான்: Lokah வெற்றியால் தள்ளிப்போகும் காந்தா வெளியீடு - படக்குழு அறிவிப்பு!
துல்கர் சல்மான், சமுத்திரக்கனி, பாக்யஶ்ரீ போர்ஸ் இணைந்து நடித்துள்ள திரைப்படம் காந்தா. மறைந்த நடிகர் தியாகராய பாகவதர் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த படத்தை செல்வராஜ் செல்வமணி இயக்கியுள்ளார்.
ராணா டகுபதியின் ஸ்பிரிட் மீடியா மற்றும் துல்கர் சல்மானின் Wayfarer Films நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
காந்தா திரைப்படத்தின் வித்தியாசமான கதைக்களத்தை எடுத்துக்காட்டும் வகையில் வெளியான டீசர் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தது. அதில் செப்டம்பர் 12ம் தேதி காந்தா திரைப்படம் வெளியாகும் எனக் கூறப்பட்டிருந்தது.

ஆனால் இன்று வெளியீட்டு தேதி தள்ளிப்போவதாக திடீரென அறிவித்துள்ளது திரைப்படக் குழு. துல்கர் சல்மான் தயாரிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் லோகா திரைப்படமும் இதற்கு ஒரு காரணம் எனக் கூறப்பட்டுள்ளது.
காந்தா படக்குழு அறிக்கை
படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், "அன்பும் மதிப்பும் மிக்க ரசிகர்களே, வணக்கம்.
எங்களுடைய காந்தா திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியானதில் இருந்து நீங்கள் கொடுத்து வரும் அன்பும் ஆதரவும் எங்களை நெகிழச் செய்துள்ளது. உங்களுக்குச் சிறந்ததொரு படைப்பாகக் காந்தாவை தர வேண்டும் என்கிற முனைப்பில் தொடர்ந்து இயங்கி வருகின்றோம்.

எங்களின் லோகா திரைப்படம், உங்களின் பலத்த வரவேற்பைப் பெற்று, வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. சந்திராவின் இந்த வெற்றி முழக்கம் இன்னும் சில நாள்கள் தொடர்ச்சியாகத் திரையரங்கங்களில் ஒலிக்க வேண்டுமென விரும்புகின்றோம். மேலும், இதற்கு ஈடான இன்னொரு சிறந்த திரையனுபவமாகக் காந்தாவை வழங்க நாங்கள் உழைத்து வருகின்றோம்.
இதற்காக, காந்தா திரைப்படத்தின் வெளியீடு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய வெளியீட்டு தேதியை விரைவில் அறிவிக்கின்றோம்.
உங்களின் தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றி ! உங்களைத் திரையரங்கில் சந்திக்க மிகுந்த ஆவலாய் இருக்கின்றோம்!" எனக் கூறப்பட்டுள்ளது.
Lokah
கல்யாணி பிரியதர்ஷன், நஸ்லென், சாண்டி நடிப்பில் வெளியான மலையாளம் சூப்பர் ஹீரோ திரைப்படம் லோகா சாப்டர் 1: சந்திரா. பெரிய ஆர்பாட்டம் இல்லாமல் வெளியான இந்த படம் ரசிகர்கள் வாய்வழியாகப் பரவி இந்தியா முழுவதும் ஹிட் ஆகியிருக்கிறது.
100 கோடி வசூலைத் தாண்டிய முதல் பெண் மைய தென்னிந்திய திரைப்படம் என்ற சாதனையை புரிந்திருக்கிறது லோகா.